அரசு ரப்பர் கழகத்தின் சொத்துகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு: தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் எனக் குற்றச்சாட்டு

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை கொஞ்சம், கொஞ்சமாக வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரப்பர் பால் வடிப்புத் தொழிலைச் சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி, ''இது பெரிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத மாவட்டம். இங்கு மலையோரப் பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக இருக்கும் தனியார் ரப்பர் தோட்டங்கள்தான் மலையோரப் பகுதி மக்களுக்கு வேலை வழங்கி வந்தன. இதன் அடிப்படையில்தான் குமரி மாவட்டத்தில் அரசுத் துறையின் கீழ் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பைப் பெருக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பலகட்டப் போராட்டங்களுக்கு பின்பு சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டு ரப்பர் உற்பத்தியும் அதைச் சார்ந்த பணிகளும் தொடங்கப்பட்டன.

இதன்படி குமரி மாவட்டத்தின் கீரிப்பாறை, பெருஞ்சாணி, மைலார் ஆகிய பகுதிகளில் ரப்பர் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் தொடக்கத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வரையிலும் வேலைவாய்ப்புப் பெற்று அவர்களின் குடும்பங்கள் பிழைத்து வந்தன. பின்னர் இந்த அரசுத் தோட்டம் என்பது 1984 அக்டோபர் முதல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்டுச் செயல்படுகிறது.

இந்த அரசு ரப்பர் கழகத்தில் உரிய காலங்களில் ரப்பர் மறுநடவுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும், அவ்வப்போது களையெடுப்புப் பணிசெய்து தொழிலாளர்கள் சிரமமின்றி பால் வடிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், இதற்கு மாறாக, தவறான காரணங்களைக் கூறி அரசு ரப்பர் கழகத்தின் நிலப்பரப்பின் கணிசமான பகுதியினை ரப்பர் பயிரிடவில்லை என்று சொல்லி வனத்துறைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதைக் கண்டித்து போராட்டம் நடத்திவந்த எங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கும் ரப்பர் கழகம், ''அரசு ரப்பர் கழக நிலப்பரப்பு 4,785.70 ஹெக்டேர் என்றும் இதில் வனத்துறைக்கு ஒப்படைத்தது நீங்கலாக 3,994.495 ஹெக்டேரில் மட்டுமே இப்போது ரப்பர் கழகம் செயல்படுகிறது. அதிலும், 1,243 ஹெக்டேர் நிலத்தில்தான் பால்வடிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 24-ம் தேதியன்று நடைபெற்ற ரப்பர் கழக நிர்வாகக்குழுக் கூட்டத்தில் மேலும் 417.781 ஹெக்டேரினை வனத்துறைக்கு ஒப்படைக்க விருப்பதாகவும், இதேபோல் அரசு ரப்பர் கழகச் சொத்தினை படிப்படியாக உபயோகமற்ற பூமி என அடையாளப்படுத்தி வனத்துறைக்கு ஒப்படைக்கும் நடவடிக்கை தொடரும்'' என்றும் தகவல் கொடுத்துள்ளது.

இதைப் பார்க்கையில் அரசு ரப்பர் கழக அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாகவே வேண்டுமென்றே ரப்பர் கழகத்தின் கணிசமான நிலப்பரப்பில் ரப்பர் நடவு மற்றும் மறுநடவு செய்யாமல் உபயோகமற்ற பூமி என ஒதுக்கி தவறான தகவல்களை அரசுக்குக் கொடுத்து ரப்பர் கழகச் சொத்தினை வனத்துறைக்குப் படிப்படியாக ஒப்படைத்துள்ளனர். இதனால் தொடக்கக் காலத்தில் சுமார் 5 ஆயிரம் பேராக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையானது இப்போது 2 ஆயிரத்துக்கும் கீழே சென்றுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய கடிதத்தைப் பார்க்கையில் மாநில அரசின் பொதுத்துறைப் பட்டியலில் வரும் இந்நிறுவனமானது வெகுவிரைவில் மூடப்படும் நிலை ஏற்படும் எனக் கவலை ஏற்படுகிறது.

தொழில் வாய்ப்புகள் குறைவான குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களின் மூலம் கிடைக்கும் தரமான ரப்பரைப் பயன்படுத்தி கனரக ரப்பர் தொழிற்சாலை மற்றும் சிறு தொழில்களைத் தொடங்க வேண்டும். குமரியில் வேலைவாய்ப்புக்கான வாசலாக இருந்த அரசு ரப்பர் கழகத்தை அரசு முறையாகக் கண்காணித்து, வனத்துறைக்கு இடம் ஒப்படைப்பதை நிறுத்தவேண்டும்'' என்றார்.

இந்திய அளவில் தரமான ரப்பர் விளையும் பகுதிகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இயல்பாகவே இயற்கை ரப்பர் விளைவதற்கு ஏற்ற சூழல் இங்கு இருந்தும், ரப்பர் கழகம் தனது இடத்தை வனத்துறைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாரை வார்ப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்