தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுத் துள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரத்துக்கும் ஏற்பாடு செய்து புதிய வழியை காண்பித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 85 திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியாளரும், சமூகசெயற்பாட்டாளருமான கிரேஸ்பானு தலைமையில் மனு வழங்கினர். ஆட்சியர் வழிகாட்டுதலின் பேரில், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, மின்வாரியத்துறை, கனிமம் மற்றும் சுரங்கத்துறை என 7 துறைகள் ஒன்றிணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தின.
30 பசுமை வீடுகள்
அதன்படி, கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, தமிழக முதல்வரின் சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய 30 பசுமைவீடுகள் கட்டப்பட்டன. மகாத்மாக காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாட்டு தொழுவம் அமைத்து கொடுக்கப்பட்டது. கூட்டுறவுத் துறையின் மூலம் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா கடந்த வாரம் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. தற்போது புதிய வீட்டில் வாழ்க்கையை தொடங்கிய உள்ள திருநங்கைகள் மாடுகளை பராமரிப்பதுடன் பாலை கறந்து விற்பனை செய்வது என உற்சாகத்துடன் சுழல்கின்றனர்.
பால் பண்ணை
இதுகுறித்து கிரேஸ் பானு கூறும்போது, ‘திருநங்கைகளுக்கு நலவாரிய அடையாள அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தவுடன் அடுத்த 2 நாட்களில் எங்களைத் தேடி வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து விசாரித்தனர். ஒரு வாரத்தில் எங்களுக்கு நலவாரிய அட்டை வந்துவிட்டது. இதனை வைத்து ஆதாருக்கு பதிவு செய்தோம்.
ஆதார் கிடைத்தவுடன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினர். மேலும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
அப்போது திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். உடனே, பால் பண்ணைவைத்து கொடுக்க ஏற்பாடு செய்வதாக கூறியவர், ஒரு நபருக்கு 2 கறவை மாடுகள் வாங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தலா ரூ.90 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
முதல் கட்டமாக தலா கறவை மாடு வாங்கி உள்ளோம். இங்கு கறக்கும் பாலை விற்பனை செய்ய ஏதுவாக, மந்தித்தோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை தொடங்கினோம். இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 300 லிட்டர் பால் ஆவினுக்கு வழங்குகிறோம்.
தனி இட ஒதுக்கீடு வேண்டும்
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2.5 ஏக்கர் நிலத்தில் வீடு, மாட்டு தொழுவம் ஒன்றரை ஏக்கரில் அமைத்துள்ளோம். மீதமுள்ள ஒரு ஏக்கரில் தையல், கணினி பயிற்சி அமைத்து தருமாறு கேட்டுள்ளோம். திருநங்கைகளின் திறமையை வளர்க்க இது உதவும்.
இங்குள்ள 30 திருநங்கைகளில் 3 பேர் காவலர் தேர்வு எழுதியுள்ளனர். 6 பேர் பட்டதாரிகள். இவர்கள் அனைவருக்கும் படிப்புக்குத் தகுந்த அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கினால் எங்களது சமூகம் உயர்ந்துவிடும் என்றார்.
இந்தியாவில் முதல்முறை
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ‘‘திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் மரியாதை வேண்டுமென்றால் நல்ல வருமானம் இருக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு பின்னர் அவர்களுக்கு மேலும் ஒரு கறவை மாடு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 600 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும். மேலும், பால்கோவா, மில்க் சுவீட்ஸ், மில்க் ஷேக் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்களே பேக்கரி தொடங்கலாம்.
மேலும், கூட்டுறவு சங்கம் சார்பில் ஆவின் பார்லர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்ற இந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
இதேபோல், புதுக்கோட்டை யில், 5 திருநங்கைகளுக்கு பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 திருநங்கைகளுக்கு தையல் பயிற்சி அளித்து, புதியம் புத்தூரில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான பூர்வாங்க பணி கள் நடந்து வருகின்றன’’ என்றார்.
குடியிருப்புக்கு ஆட்சியர் பெயர்
நலவாரிய அடையாள அட்டை பெறுவதே திருநங்கைளுக்கு சவாலான காரியமாக இருக்கும் நிலையில் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செயல்படுத்தியுள்ளார். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக தங்களது குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிக்கு சந்தீப் நகர் என்று ஆட்சியர் பெயரை திருநங்கைகள் சூட்டியுள்ளனர்.திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் மரியாதை வேண்டுமென்றால் நல்ல வருமானம் இருக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு பின்னர் அவர்களுக்கு மேலும் ஒரு கறவை மாடு வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago