133 நாட்களுக்குப் பின் கோயம்பேடு உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி திறப்பு

By செய்திப்பிரிவு

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிவந்த மொத்த தானிய விற்பனை அங்காடி மே மாதம் முதல் வாரத்தில் மூடப்பட்ட நிலையில், 133 நாட்களுக்குப் பின் இன்று திறக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தொடங்கின.

சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோரப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடி வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.

தற்காலிக சந்தைகளானது நகரப்பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதாலும், வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் தற்காலிக சந்தைகள் உள்ள பகுதிகளில் மழை நீர் வெகுவாக தேங்க வாய்ப்பு உள்ளதாலும், அப்பகுதியில் வியாபாரம் செய்வது கடினம் என்பதாலும் வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கடந்த ஜூலை 14 அன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், ஆகஸ்டு 24 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை திறந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓபிஎஸ், கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி நேரில் ஆய்வு செய்து அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளான சாலைகளை சரி செய்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், கழிப்பிடங்களை சீரமைத்தல், மின்விளக்குகளை மாற்றியமைத்தல் போன்ற பல்வேறு பணிகளைப் பார்வையிட்டார்.

இதையடுத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாகத் திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*முதற்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18 (இன்று),

* காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28 அன்றும்,

* அதன்பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி இன்று காலை திறக்கப்பட்டது. மே மாதம் முதல் வாரத்திலிருந்து மூடப்பட்ட கடைகளை திறந்து கடைகளில் உள்ள கெட்டுப்போன பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர். சரக்குகள் லாரிகளில் வந்து இறங்கின. அவற்றை இறக்கி கடைகளில் அடுக்கும் பணியிலும் வியாபாரிகள் ஈடுபட்டனர். முதல் நாள் என்பதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

அவ்வாறு அங்காடிகளைத் திறக்கும் சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ‘B’ சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இடதுபுறமாக திரும்பி, ‘E’ சாலை வழியாக மலர் அங்காடிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே கொள்முதல் செய்வதற்கு அங்காடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்.

* அங்காடிக்கு வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் ‘A’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு சமயத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அங்காடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு சரக்குகளை இறக்கி, அந்த வாகனம் வெளியில் சென்ற பிறகு அந்தக் கடைக்கு அடுத்த வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.

*கடைகளுக்கு வெளிப் பகுதிகளில் மற்றும் அங்காடியின் வேறு எந்தப் பகுதிகளிலும் சரக்குகளை இறக்கி வைப்பது மற்றும் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படாது.

* கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

* அவ்வாகனங்கள் சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினமே இரவு 12 மணிக்குள் அங்காடியை விட்டு வெளியில் சென்றுவிட வேண்டும்.

*சில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்ய வரும் இலகு ரக வாகனங்கள் அதிகாலையிலிருந்து நண்பகல் 12 மணி வரை மட்டுமே அங்காடிக்குள் அனுமதிக்கப்படும்.

*அங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கரப்பயணிகள் ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி இல்லை.

* தனி நபர் கொள்முதல் முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. அங்காடிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.

* தினமும் அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவ துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

*அங்காடிக்குள் உள்ள அனைத்துக் கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும்.

* அங்காடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் மற்றும் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும்.

* அங்காடிக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து நபர்களும், முகக்கவசம் அணிந்து இருப்பது கட்டாயமாகும்.

* முகக்கவசம் இல்லையேல், உள்ளே கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் கட்டாயமாக்கப்படும்.

* கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் மற்றும் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும், காவல் துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* மேற்கண்ட விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது உரிம விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பன போன்ற ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 secs ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்