கூட்டணி வேண்டுமா, வேண்டாமா? என்பதில் அனைத்து கட்சிகளையும்விட பாமகதான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டணி தேவை என்று வலியுறுத்தும் நிலையில், தேமுதிகவின் முடிவுக்கு பின்பு கூட்டணியைப் பற்றி யோசிக்கலாம் என்கிற மனநிலைக்கு வந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அன்புமணி ஆரம்பத்தில் இருந்தே கூட்டணியை விரும்பி வரும் நிலையில், காடுவெட்டி குரு உள்ளிட்ட பாமக முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் காடுவெட்டி குரு ராமதாஸை சந்தித்து சில கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.
திமுக அல்லது பாஜக என யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு லாபம் இல்லை. ஏனென்றால், நமது வன்னியர் ஓட்டுகள் அவர்களுக்குப் பயன்படுமே தவிர, அவர்கள் வசம் உள்ள தலித் ஓட்டுகள் ஒருபோதும் நமக்கு கிடைக்காது. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது அக்கட்சி தென் மாவட்டங்களில் 10-ல் 9 தொகுதிகளில் மோசமாக தோற்றது. பாமகவுடன் கூட்டணி வைத்த காரணத்துக்காக அதிமுகவுக்கு அப்பகுதி தலித்கள் ஓட்டு போடாததே இதற்கு முக்கிய காரணம். அதேசமயம், அத்தேர்தலில் வட மாவட்டங்களில் வன்னியர் ஓட்டுகளால் தென் சென்னை, திருவள்ளூர், சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.
2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். ‘பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் வட மாவட்டங்களில் ஒற்றுமையாக கைகோத்தால் 90 தொகுதிகளை வெல்லலாம்’என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் கூறினார். ஆனால், அப்போதும் தலித் மக்கள் நமக்கு ஓட்டு போடாமல், அதிமுகவுக்கு ஓட்டு போட்டனர். அதனால், வட மாவட்டங்களில் 8 தொகுதிகள்தான் (பாமக மூன்று) திமுக கூட்டணியால் வெல்ல முடிந்தது.
தலித்களின் ஆதரவு ஒருபோதும் நமக்கு கிடைத்ததில்லை. எனவே, வன்னியர் நலன் என்பதில் உறுதியாக இருப்போம். திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்கிற பொதுவான நீரோட்டத்தில் நாம் இணைந்தால், ஏற்கெனவே நமக்கு ஆதரவாக இருக்கும் முதலியார், யாதவர், முத்தரையர், வெள்ளாள கவுண்டர் ஆகிய சாதி அமைப்புகளின் ஆதரவும் நம்மைவிட்டு போய்விடும்.
இதற்கும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. கடந்த 1952-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராமசாமி படையாச்சி (உழவர் உழைப்பாளர் கட்சி) தனித்து நின்று 19 தொகுதிகள் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து அவருக்கு காமராஜர் மந்திரி பதவி கொடுத்து கூட்டணி வைத்துக்கொண்டார். அடுத்த தேர்தலில் மாணிக்கவேல் நாயக்கர் (பொது நலக் கட்சி) தனித்து நின்று 7 தொகுதிகள் வெற்றி பெற்றார். அவருக்கு காங்கிரஸ் சபாநாயகர் பதவி கொடுத்தது. பின்பு அவர்களும் கூட்டணி சேர்ந்ததன் மூலம் சோபிக்கவில்லை.
அப்போதிருந்தே வன்னியர் சமுதாயத்தினர் தனித்து நின்றிருந்தால் திராவிடக் கட்சிகளுக்கு இணையாக வளர்ந்திருப்போம். எனவே, வரும் தேர்தலில் நமக்கு வெற்றி, தோல்வி என்பதைவிட வன்னியர் சமூகத்தினர்தான் முக்கியம். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று நமது ஓட்டு சதவீதத்தை நிரூபிப்போம் என்று காடுவெட்டி குரு கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, ‘முதலில் விஜயகாந்த் முடிவு எடுக்கட்டும். அதன் பின்பு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலைக்கு ராமதாஸ் வந்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago