நீட் தேர்வு விவகாரம்: முதல்வர் பழனிசாமியின் 7 குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டாலின் பதில்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு தொடர்பாக, திமுக மீது முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 17) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவக் கல்விச் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இனிமேல் பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று நேரமில்லாத நேரத்தில் சட்டப்பேரவையில் நான் எழுப்பிய பிரச்சினைக்கு, வெளிநடப்புச் செய்த காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பார்த்து முதல்வர் பதிலளித்தார்.

நீட் தேர்வில் அதிமுக அரசின், குறிப்பாக, முதல்வர் பழனிசாமியின் துரோகத்தை, அவர் பாஜகவுடன் சேர்ந்து நடத்திய சூழ்ச்சியை, சதியை மாணவர்களும் மறக்க மாட்டார்கள்; நீட் தேர்வால் துயரப்படும் பெற்றோரும் மன்னிக்க மாட்டார்கள்.

பேரவை விதிகளை முறையாகப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு, முதல்வர், ஒரு பொய் ஆவேசத்தை, வேடம் போட்டுக்கொண்டு விரல் நீட்டிக் காட்டிவிட்டால், நீட் தேர்வில் அதிமுக அரசின் வரலாற்றுப் பிழையை, வரலாறு காணாத துரோகத்தை திரை போட்டு மறைத்து விடலாம்; தன் துரோகம் மறைந்து விடும் என்று நினைத்து, பகல் கனவு காண்கிறார்.

ஆனால், அதிமுக ஆட்சியும், முதல்வர் பழனிசாமியும் நீட் தேர்வில் நடத்தியுள்ள கபட நாடகங்கள் 'இல்லை. துரோகம் செய்தது அதிமுக' என்று அணி வகுத்து நிற்கின்றன. இதோ ஆதாரங்கள்!

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

குற்றச்சாட்டு: 2010 இல் நீட் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? மத்தியில் அப்போது யார் ஆட்சி இருந்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது.

பதில்: முதலில் 2010 இல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. இங்கு திமுக ஆட்சி நடைபெற்றதால், முதல்வர் கருணாநிதி உடனடியாக உயர் நீதிமன்றத்தை நாடி, வழக்குத் தொடுத்து நீட் தேர்வைக் கொண்டு வரும் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளுக்குத் தடையுத்தரவு வாங்கினார்.

திமுக ஆட்சி இருந்தவரை 2011-ம் ஆண்டுவரை நீட் தேர்வு செயல் வடிவத்திற்கும் வரவில்லை; தமிழகத்தில் நீட் தேர்வும் நடக்கவில்லை. முதல்வர் பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் திமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது என்று ஒரு ஆதாரத்தை வெளியிடட்டும்.

ஆகவே, திமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. முதல்வராக இருந்துகொண்டு, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைமை வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று நீட் தேர்வைத் தமிழகத்திற்குள் நுழைய விடாமல் துணிச்சலாகத் தடுத்து நிறுத்தியது திமுக.

இதுபோன்று மத்திய பாஜக அரசை எதிர்த்து நடவடிக்கை எடுத்த ஒரு நேர்வைக்கூட எடப்பாடி பழனிசாமி அரசு எடுத்துக்காட்ட முடியாது.

குற்றச்சாட்டு: யாருடைய ஆட்சியில் நீட் வந்தது? நீட் தேர்வு எப்பொழுது வந்தது?

பதில்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே 18.7.2013 இல் நீட் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அந்தத் தீர்ப்பு வருவதற்கான வழக்குகளில், திமுக ஆட்சியிலிருந்தபோது தொடுத்த தமிழக அரசின் வழக்குதான் மிக முக்கியக் காரணம். 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தது; நீட் வரவில்லை; நீட் தேர்வும் நடக்கவில்லை.

2014-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. அதற்கு அன்றிலிருந்து திரைமறைவிலும் பொதுவெளியிலும் அதிமுக ஆதரவு அளித்து வந்தது; பிறகு கூட்டணியாகவே மாறியது.

நீட் தேர்வை ரத்து செய்து அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விசாரணையே இல்லாமல், தீர்ப்பளித்த வழக்கில், நீட் வேண்டும் என்று மைனாரிட்டியாக மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வு 11.4.2016 அன்று திரும்பப் பெற்றது.

அப்போது மாநிலத்தில் அதிமுக ஆட்சி. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் சாட்சாத் ஜெயலலிதா ஆட்சி! அதிமுகவோ, அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவோ இந்தத் தீர்ப்பு திரும்பப் பெறப்படும்போது, அதற்கு எதிராக வாயே திறக்கவில்லை.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வாதிடவில்லை. விசாரணை இன்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் இன்றி இந்தத் தீர்ப்பை திரும்பப் பெறக்கூடாது என்று கூட வாதிடவில்லை.

'திமுக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுச் சட்டமாகி விட்டது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆகவே, இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்குப் பொருந்தாது' என்றும் கூறவில்லை. அப்படி பாஜகவுக்கு உள்நோக்கத்துடன் ஒத்துழைப்பு கொடுத்ததன் விளைவாகவே, 2016-ல் நீட் மீண்டும் வந்தது.

ஆகவே, நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பு ரத்தானதும், நீட் தேர்வு நடத்தப்படுவதற்கான அவசரச் சட்டம் பாஜக அரசால் 24.5.2016 அன்று பிறப்பிக்கப்பட்டது. அது பிறகு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 5.8.2016 அன்று சட்டம் அரசிதழில் வெளிவந்ததும் அதிமுக - பாஜக ஆட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் நடந்தபோதே என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

2016-ல் நாங்கள் மாநிலத்தில் ஆட்சி செய்யவில்லை என்றோ, மத்தியில் பாஜக ஆட்சி இல்லை என்றோ, எங்களுக்குள் ரகசிய உறவு, கூட்டணி இல்லை என்றோ முதல்வர் பழனிசாமியால் மறுக்க முடியுமா?

குற்றச்சாட்டு: நீட் மசோதா மாநிலங்களவையில் வந்தபோது அதை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது. திமுக அதை எதிர்க்கவில்லை.

பதில்: அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. மக்களவையிலும் (39 எம்.பி.க்கள்), மாநிலங்களவையிலும் (13 எம்.பி.க்கள்) சேர்த்து 52 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுக அப்போது என்ன செய்தது? வெளிநடப்பு செய்தது. ஏன் நீட் மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லை? வாக்களிக்கும் உரிமையைத் தானே முன்வந்து தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, வெளிநடப்பு மட்டும் செய்து, கபட நாடகம் ஆடி, நீட் சட்டம் வருவதற்கு ஆதரவு அளித்தது அதிமுக. ஏன்? எதற்காக? காரணத்தை பழனிசாமி, தமிழக மக்கள் அறிந்து கொள்வதற்காக, வெளியிட முடியுமா?

நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம் என்று ஒரு துரும்பையாவது ஆதாரமாகக் காட்ட முடியுமா? ஆனால், திமுகவுக்கு வெறும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் என்றாலும், நீட் தேர்வு, மாநிலக் கல்வி உரிமையைப் பாதிக்கும், மாணவர்களைப் பாதிக்கும், அவசரகதியில் இந்தச் சட்டத்தை எடுத்து வருகிறீர்கள், இது பன்முகத்தன்மையைப் பாதிக்கும் என்று கூறி எதிர்த்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள் என்று அன்று ஆணித்தரமாக வலியுறுத்தியது திமுக மட்டுமே! மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழியே தான்!

53 பேரை வைத்துக் கொண்டு கண்துடைப்பு, கபட நாடகம் ஆடிவிட்டு, இப்போது மாணவர்களை ஏமாற்ற நீலிக்கண்ணீர், முதலைக் கண்ணீர் வடிப்பது ஏன்?

குற்றச்சாட்டு: 2010-ம் ஆண்டு ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வாதாடித் தீர்ப்பைப் பெற்றது அதிமுக ஆட்சி.

பதில்: 2010-ம் ஆண்டு இந்தத் தீர்ப்பு வரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்த தீர்ப்பு 2013-ல் வந்தது. அப்போது திமுக தொடுத்த வழக்கில்தான் அந்தத் தீர்ப்பு வெளிவந்ததே தவிர, அதிமுக அரசு தொடுத்த வழக்கால் அல்ல என்பதே உண்மை.

நீட் தேர்வுக்கு 2010-ல் தடை வாங்கியதும் திமுக பிறகு அந்தத் தேர்வை உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யும் தீர்ப்பை வாங்கியதும் திமுக தொடுத்த வழக்கு. தீர்ப்பு வராத வருடத்தைச் சொல்லி, தன் தோல்வியை முதல்வர் பழனிசாமி திசை திருப்புகிறார்.

குற்றச்சாட்டு: நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டுவர யார் காரணம்? நீங்கள் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சிதான்.

பதில்: பச்சைப் பொய்! நீட் தேர்வு மீண்டும் வரக் காரணம், மத்தியில் பாஜக ஆட்சி; மாநிலத்தில் பழனிசாமியின் அதிமுக ஆட்சி; 2017-18-ல் தான் முதன்முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவர்கள் மீது திணிக்கப்பட்டது.

அன்றிலிருந்துதான் அரியலூர் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை 13 தற்கொலைகள். இந்த தற்கொலைகள் அனைத்தும் பாஜக - அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளன. அதிமுகவும்- பாஜகவும்தான் இந்த நீட் தேர்வுக்குக் காரணம்; தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளுக்கும் காரணம். கை நீட்டிப் பேசி, கைக்குள் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்திட முடியாது.

குற்றச்சாட்டு: நீட் தேர்வைக் கொண்டு வந்ததுதான் 13 பேர் மரணத்திற்கு காரணம். அதற்கு திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

பதில்: வரலாற்றுப் பிழை மட்டுமல்ல; சொந்தப் பாதுகாப்புக்காக, துரோக சரித்திரத்தையே உருவாக்கியிருப்பது எடப்பாடி பழனிசாமிதான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்தான தீர்ப்பை மீண்டும் உச்ச நீதிமன்றமே திரும்பப் பெற்றபோது கனத்த அமைதி காத்தது அதிமுக ஆட்சி.

பிறகு நீட் சட்டம் வந்த போது எதிர்த்து வாக்களிக்காமல், ஒப்புக்கு வெளிநடப்பு செய்து ஆதரவளித்தது அதிமுக ஆட்சி. 2017-18-ல் நீட் தேர்வை நடத்தியது எடப்பாடி பழனிசாமி ஆட்சி. தமிழக சட்டப்பேரவையில் 2017-ல் ஒருமனதாக, திமுக ஆதரவளித்து நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் இரு மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல், குடியரசுத் தலைவர் நிராகரித்ததையும் மறைத்தது பழனிசாமிதான்.

அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதும் சட்டப்பேரவையில் மீண்டும் அந்த மசோதாக்களை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்திருக்கும். அதையும் கெடுத்து, மாணவர்களையும் பெற்றோரையும் பழிவாங்கியது பழனிசாமிதான்.

தேர்தல் அறிக்கையில் நீட்டை ரத்து செய்வோம் என்று வெற்று அறிவிப்பு செய்து, தமிழக மக்களை ஏமாற்றியதும் அவரேதான்! சட்டப்பேரவையின் மசோதாக்களைக் கூட குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற திறமையில்லாத வழி தெரியாத பழனிசாமி, முதல்வராக நீடித்தால் போதும்; ஊழல் புகார்கள், வழக்குகளிலிருந்து தப்பித்தால் போதும்; என்று மாணவர்களைப் பலிகடா ஆக்கியவர்.

ஆகவே, இன்று வரை மாணவர்களை ஏமாற்றி, நீட் தேர்வை ரத்து செய்யாமல், விலக்கும் பெறாமல், 13 மாணவர்கள் தற்கொலைக்கு அப்பட்டமான காரணம் முதல்வர் பழனிசாமியின் அதிமுக ஆட்சியே! இந்தத் துரோக வரலாற்றை சரித்திரம் என்றும் மறக்காது; மறைக்கவும் செய்யாது! நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!

குற்றச்சாட்டு: நீட் தேர்வை எப்படி ரத்து செய்வார் மு.க.ஸ்டாலின்?

பதில்: அலுவல் மொழியாகத் தமிழும் ஆங்கிலமும் தொடரும் என்று தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்ததைப் போலவும்; நுழைவுத் தேர்வை ரத்து செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று, அந்தச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது போலவும்; முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது, திமுகவும் ஒருமனதாக, நிறைவேற்றி அனுப்பிய ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது போலவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சட்ட வழிகளைப் பயன்படுத்தி, சட்டப்பேரவையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேவைப்படுங்கால் நீதிமன்றங்களின் ஆதரவைப் பெற்று; நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக எப்போதும் சொன்னதைச் செய்யும்; செய்வதைத்தான் சொல்லும் என்பதை முதல்வர் பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்''.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்