தேசிய கல்விக் கொள்கை குறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும். சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும் என சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசினார்..
இன்று (16/09) எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் தேசிய கல்விக் கொள்கை-2020 குறித்துப் பேசியதாவது:
“தேசிய கல்விக் கொள்கை-2020, மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. "மும்மொழித் திட்டம்" என்று திணிக்க முயலுவது, அண்ணா அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.
சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், தமிழ் மொழிக்கும் - ஏனைய இந்திய மொழிகளுக்கும் இல்லை. ஊட்டச் சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி என்பது, குழந்தைகளின் உரிமைகளுக்கு, மனித உரிமைகளுக்குப் புறம்பானது.
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு; ‘பிளஸ் 2’ கல்விமுறையில் மாற்றம் எல்லாம், நம் மாநிலத்தில் வெற்றிகரமாகச் செயல்படும் கல்விமுறையைச் சீர்குலைப்பது ஆகும். ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி, ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் ஆகியன ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன.
உயர்கல்வியில்; தன்னாட்சி உரிமை பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; உயர்கல்வி ஆணையம் அமைப்பது மாநில அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளும் போக்கு. கலை மற்றும் அறிவியல் - பட்டயப் படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு ; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது; மாநிலங்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடங்களைத் தேசிய அளவில் வகுப்பது ஆகியன ஆபத்தானவை.
5 ஆம் வகுப்பு வரை, "முடிந்தால் தாய்மொழியில்" கற்றுக் கொடுக்கலாம் என்பது - தமிழகத்தில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள, "தமிழ்க் கற்றல் சட்டம்-2006"-க்கு எதிரானதாகும். கடந்த ஆகஸ்டு 8 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, "இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும்" என்று அறிவித்துள்ளார் முதல்வர்.
இன்று மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களின் மேஜைகள் மீதும் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது. அப்புத்தகத்தில் தாவரங்களின் பெயர்கள் எல்லாம் வரிசைப்படுத்தி போடப்பட்டிருக்கிறது. படங்களுடன் அழகாக அது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள பெயர்கள் தமிழில் போடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் பெயர் போடப்பட்டிருக்கிறது. நான் கேட்கிற கேள்வி என்னவென்றால், இது மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறதா - இல்லையா?
முதல்வர் அழுத்தம் திருத்தமாக நாங்கள் இருமொழிக் கொள்கையைத்தான் நடைமுறைப்படுத்துவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியிருக்கிறார். எனவே இதையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை (உயர்கல்வி, பள்ளிக்கல்வி) நியமித்துள்ளார். பாதக அம்சங்களைப் பெற அக்குழுக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தமிழும் - ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர் மூச்சாக - உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக்கொண்டு, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும்.
தேசியக் கல்விக் கொள்கையை விவாதித்து - சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கும் - தமிழ்மொழிக்கும் விரோதமான, 'தேசிய கல்விக் கொள்கை 2020'-ஐ முழுமையாக எதிர்க்க வேண்டும்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago