வரதட்சணைக் கொடுமை வழக்கில் அதிகபட்ச தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த முடிவு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வரதட்சணைக் கொடுமைக்கு வழங்கப்படும் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும், பாலியல் தொழிலில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை ஈடுபடுத்துவோருக்கு வழங்கப்படும் தண்டனையை ஆயுள் தன்டனையாக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலம் பேணி, அவர்களின் உரிமைகளையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த பல்வேறு முன்னோடித் திட்டங்கள் தீட்டி, செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

* தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பாலின விகித மேம்பாட்டினை உறுதி செய்வதற்காக பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண் சிசுக்கொலையை ஒழிக்க, தொட்டில் குழந்தைத் திட்டம்.

* பெண்கள் உயர்கல்வி கற்க ஊக்குவிக்கவும், ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்களின் மகள்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகையுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்.

* ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் தங்குவதற்கு அரசு சேவை இல்லங்கள்.

* பணிபுரியும் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கும் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

*பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையிலும், முன்னோடியாக, 1992-ம் ஆண்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

* இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (Crime Against Women and Children Unit) ஒரு முன்னோடித் திட்டமாக 6.3.2019 முதல் தமிழ்நாட்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கத்திற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் கண்காணிப்புப் பிரிவு (IUCAW), சிறப்பு சிறார் காவல் பிரிவு (SJU), வரதட்சணை தடுப்புப் பிரிவு, குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (ACTU), ஆகிய அலகுகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

* சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட 35 அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் நவீன வசதிகள் பொருத்திய ஊர்திகள், நிர்பயா நிதியின் கீழ் வழங்கப்பட்ட அம்மா ரோந்து வாகனம் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றின் வாயிலாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றச் செயல்கள் தடுக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவற்றைத் தடுக்க விழிப்புணர்வுப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Goondas Ac) கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

* அதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவையும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குற்றங்கள் வெகுவாகத் தடுக்கப்பட்டுள்ளன.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்வதற்கு தமிழக அரசு, 1860-ம் ஆண்டைய இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று கீழ்க்கண்ட சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்.

1) பிரிவு 304-ல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தண்டனையாக வழங்குதல்,

2) பிரிவு 354-ல் குற்ற நோக்கத்துடன் (பெண்களின் ஆடைகளைக் களைதல்) செயல்படுவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக வழங்கப்படும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கடுமையாக்கி பத்தாண்டுகளாகவும் வழங்குதல்,

3) பிரிவு 354-ல் தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களைப் பின்தொடர்ந்தால், இரண்டாம் முறையும், தொடர்ந்தும் குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டுகள் வரையான சிறைத் தண்டனையை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக்கவும்,

4) பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விலைக்கு வாங்குதல், தற்போது வழங்கப்படும் அதிகபட்சமான பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்குப் பதிலாக, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களைக் காக்கும் என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேரவையில் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்