சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது நீட் தேர்வு. பிற கல்விமுறையில் பயின்றுவிட்டு வரும் மாணவர்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தக்கூடியது. பள்ளிக் கல்வியுடன் கணிசமாகச் செலவு செய்து கூடுதலான பயிற்சி தேவைப்படுகிறது. அதேபோன்ற பயிற்சியை அனைவராலும் செலவழித்துப் பெற முடியாது என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் பேசினார்.
நேற்று (14-9-2020) திமுக மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மாநிலங்களவையின் நேரமில்லா நேரத்தின்போது, மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.
அவர் பேச்சு விவரம்:
“மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்காகத் தயாராகும் மாணவர்கள் நீட் தேர்வின் மூலமாகச் சந்திக்கும் சில சொல்லப்படாத துயரங்களை, இந்த அவையின் மூலமாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
» சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி: சென்னை மாநகராட்சிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற அச்சத்தின் காரணமாக நேற்றுதான் தமிழகத்தின் மதுரை, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 19 முதல் 21 வயதுக்குட்பட்ட மூன்று மாணவ - மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நாமெல்லாம் அதிர்ச்சியடைந்தோம்.
நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்ற அச்சத்தின் காரணமாக இதுநாள் வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 இளம் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆணையச் சட்டம், 1956-ன் பிரிவு 10-D மற்றும் பல் மருத்துவர்கள் சட்டம், 1948-படி இளங்கலை மற்றும் முதுகலை அளவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-ன் பிரிவு 14 மருத்துவப் படிப்புகளுக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்கிறது.
மேற்கூறிய சட்டத்திருத்தங்கள் அமலான பின்னர் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது, சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமாக இருப்பது மட்டுமின்றி, சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதையும் நாடு முழுவதும் உணர முடிந்தது.
நீட் தேர்வை பல்வேறு மாநில மக்களும் எதிர்ப்பதற்கு மூன்று அடிப்படையான காரணங்கள் உள்ளன:
* மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்தத் தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது.
* இந்தத் தேர்வு பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. பிற கல்விமுறையில் பயின்று விட்டு வரும் மாணவர்களுக்கு வெளிப்படையாகவே பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
* பள்ளிக் கல்வியுடன் கணிசமாகச் செலவு செய்து கூடுதலான பயிற்சி தேவைப்படுகிறது. அதேபோன்ற பயிற்சியை அனைவராலும் செலவழித்துப் பெற முடியாது.
கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன் மூன்றாவது பட்டியலில் 25-வது இடத்தில் வைக்கப்பட்டிருப்பதால், கல்வித்துறையில் மாநிலச் சட்டப்பேரவைக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் சட்டபூர்வமான தகுதி உள்ளது. இதன் அடிப்படையிலேயே முதல் ஆட்சேபனை எழுப்பப்படுகிறது.
இத்தகைய நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரத்தை மத்திய அரசிடம் ஒருதலைப்பட்சமாக ஒப்படைப்பதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம், குறிப்பாக கூட்டாட்சி அமைப்பும் மீறப்படுகிறது.
நீட் நுழைவுத் தேர்வு 12-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால், மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மாநில மொழிகளில் படிக்கும் மாணவர்களை விட, சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.
மேலும், மாணவர்கள் 10+2 நிலையில் பல்வேறு கடினமான தேர்வுகளை முடித்த பின்னர், பள்ளிக் கல்விக்குப் பின்னர் உடனடியாக நுழைவுத் தேர்வினை எதிர்கொள்ள நேரிடுகிறது. இது அவர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இளங்கலை மாணவர்களுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்பது, வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட வெவ்வேறு வாரியங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என்பதால், சமநிலையான போட்டித் தளமாக இருக்காது.
மூன்றாவது ஆட்சேபனையைப் பொறுத்தவரையில், கடந்த நான்காண்டு கால அனுபவத்தின் அடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது நல்ல மதிப்பெண் பெற வேண்டுமானால் மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில வேண்டும். அது மிகவும் செலவு மிகுந்தது. சாமானியர்களால், இதனைப் பெற முடியாது.
ஒரே ஆண்டில், 12-ம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் நீட் தேர்வு என்று ஒன்றுக்கு அடுத்து மற்றொன்றை எதிர்கொள்வது, மாணவர்களுக்கு மனரீதியான துன்புறுத்தலையும், மனச் சோர்வையும், ஏமாற்றத்தையும், விரக்தியையும் மாணவர்களிடத்தில் உண்டாக்குகிறது. நீட் தேர்வுக்குத் தயாராவதால் நீட் பாடப்பகுதிகளால் மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
நல்லாட்சி என்பது மக்களின் விருப்பங்களை மதிப்பது; மத்திய அரசு மதிக்கட்டும். எனவே, இந்தக் கடுமையான சட்டத்தை ரத்து செய்வதோடு, மாநிலங்கள் தங்களுடைய மாணவர் சேர்க்கை நடைமுறையை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், அதனால் நம்முடைய குழந்தைகளின் உயிர்கள் பாதுகாக்கப்படும் என்பதையும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு திமுக எம்.பி. வில்சன் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago