தெருவிளக்கு மின்சாரம் பாய்ந்து சாலையில் சென்ற பெண் பலி: மாநகராட்சி மின்சாரப் பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

புளியந்தோப்பில் மாநகராட்சி தெருவிளக்கு மின்சாரக் கசிவினால், சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கிப் பலியானார். இதுகுறித்து நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவிக நகர் மண்டலத்துக்குட்பட்ட வார்டு 73-ல் உள்ள புளியந்தோப்பு நாராயண சாமி தெருவில் மழைநீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் அலிமா (35) என்ற பெண்மணி, சாலையோரம் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த பத்து நாட்களாக மின்சாரக் கசிவு குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் தெருவிளக்கு பராமரிக்கும் மாநகராட்சியினர் கண்டுகொள்ளவில்லை எனத் தெருவாசிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்கசிவு சரி செய்யப்பட்டது. அலட்சியமாகச் செயல்பட்ட மின் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலம், வார்டு-73, புளியந்தோப்பு நாராயண சாமி தெருவில் நேற்று (14/09) அன்று காலை 9.15 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க எஸ்.அலிமா, அந்தப் பகுதியில் பூமிக்கடியில் சென்ற மின்சார கேபிளில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி மரணம் அடைந்துள்ளார்.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகுந்த விசாரணை மேற்கொண்டு அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்பொழுது, அந்தப் பகுதியின் உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலைப் பொறியாளர் வெங்கட ராமன் இருவரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் தெருவிளக்குகளும், 7,220 மின்பெட்டிகளும் (Pillar Box) உள்ளன. இவற்றைப் பராமரிப்பதற்காக மாநகராட்சியில் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 700 நபர்கள் நாள்தோறும் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது 200 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எந்த இடத்திலும் மின்கசிவோ அல்லது பழுதோ இல்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்