நீட் தேர்வு: உண்மையை மூடிமறைக்க சட்டப்பேரவையில் திமுக - காங்கிரஸ் மீது அதிமுக ஆட்சியாளர்கள் பழி சுமத்துகின்றனர்; கே.எஸ்.அழகிரி கண்டனம்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு விவகாரத்தில் உண்மை நிலையை மூடிமறைக்க அதிமுக ஆட்சியாளர்கள், ஆதாரமற்ற கருத்துகளை சட்டப்பேரவையில் கூறி, திமுக - காங்கிரஸ் மீது பழி சுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப்.15) வெளியிட்ட அறிக்கை:

"நீட் தேர்வு குறித்து பேச திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தகுதி கிடையாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார். தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க முடியாத அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஆதாரமற்ற முறையில் அவதூறான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் நீட் தேர்வு 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியில்தான் முதன்முறையாகத் திணிக்கப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில், நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுவதற்கு எது காரணமாக இருந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

ஏனெனில், மத்திய காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் டிசம்பர் 2010 முதல் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் தொடர்ந்து பாஜக - அதிமுகவினர் பேசி வருகிறார்கள்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறி 2009 ஆம் ஆண்டில் சிம்ரன், ஜெயின் மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு பல தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவதற்கான முயற்சிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஈடுபட வேண்டுமென்று ஆணையிட்டது.

இதையொட்டி, டிசம்பர் 2010 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு, அன்றைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும், தமிழக முதல்வர் கருணாநிதியும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பிப்ரவரி 2013 இல் போடப்பட்டன. இதில், திமுக தலைமையிலான தமிழக அரசும் வழக்குத் தொடுத்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, நீட் தேர்வு நடத்துவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில், அன்றைய சுகாதாரத்துறை அமைச்சக அறிவுரையை மீறி, மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 11 ஏப்ரல், 2016 இல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, 28 ஏப்ரல் 2016 முதல் நீட் தேர்வு நடத்துவதற்கான வழிவகை ஏற்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், ஆதரவான நிலையை மத்திய பாஜக அரசு எடுத்தது. இந்தப் பின்னணியில் இருக்கிற உண்மை நிலையை மூடிமறைக்க அதிமுக ஆட்சியாளர்கள், ஆதாரமற்ற கருத்துகளை சட்டப்பேரவையில் கூறி, திமுக - காங்கிரஸ் மீது பழி சுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் - திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை. பாஜக ஆட்சியில் ஆகஸ்ட் 2016 இல் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பாஜகதான் காரணமே தவிர, காங்கிரஸ் கட்சியோ, திமுகவோ காரணமல்ல என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த 2017 இல் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். அதேபோல, கடந்த 2019 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய 19 ஆயிரத்து 680 மாணவர்களில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் ஒரேயொரு மாணவர் மட்டும்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது.

தமிழக அரசு நடத்திய 412 பயிற்சி வகுப்புகளில் படித்த 19 ஆயிரத்து 355 மாணவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெற்று 2019 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு?

அதேபோல, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 2.1 சதவீதத்தினர் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் சேராமல் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலை சுகாதாரத்துறை அமைச்சரால் மறுக்க முடியுமா?

ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர தனியார் பயிற்சி மையங்களில் பயின்ற 3,033 மாணவர்கள் நீட் தேர்வு மூலம் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தனியார் பயிற்சி மையங்களில் சேராத 48 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் 1.55 சதவீதத்தினர் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் சேராமல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற அவலநிலையில்தான் தமிழகத்தின் மருத்துவக் கல்லூரி சேர்க்கை இருக்கிறது என்பதை தமிழக ஆட்சியாளர்களால் மறுக்க முடியுமா?

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அனிதாவில் தொடங்கி தற்போது ஜோதி துர்கா, ஆதித்யா, மோதிலால் வரை 16 மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டு தன்னம்பிக்கை இழந்து தற்கொலை செய்துகொண்டதற்கு யார் காரணம்?

இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பாகும். இவை வெறும் தற்கொலைகள் அல்ல. அரசியல் ரீதியான தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட படுகொலைகள். இந்த மரணங்களுக்கு அதிமுக அரசுதான் முதல் குற்றவாளி.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத மாணவர்களின் தற்கொலைகள் தமிழகத்தில் மட்டும் நடைபெறுவது ஏன்? தமிழக ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும், அலட்சியப்போக்கும்தான் இதற்குக் காரணமாகும்.

மத்திய அரசு திணித்த நீட் தேர்வைத் தடுப்பதற்கு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி பிப்ரவரி 2017 இல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது அதிமுக அரசு. ஆனால், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மசோதாவை எந்தக் காரணமும் சொல்லாமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இந்தத் தகவலை ஓராண்டு காலம் வெளியே சொல்லாமல் தமிழக அரசு ஏமாற்றி வந்தது. நீட் திணிப்பை எதிர்ப்பதன் மூலம் மோடி அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதே அதிமுகவின் அணுகுமுறையாகும்.

இத்தகைய அதிமுக அரசின் போக்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பின்றி கடுமையாகப் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வு காரணமாக நொறுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு எழுதுகிற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 412 இலவசப் பயிற்சி மையங்களை தொடங்கியது. இந்தப் பயிற்சி மையங்கள் முறையாக நடந்தனவா? பாதிக்கு மேற்பட்ட நாட்கள் அவை திறக்கப்படவே இல்லை. திறக்கப்பட்டு நடந்தாலும், மாணவர்களைத் தயார்படுத்தக்கூடிய தகுதியான பயிற்சியாளர்கள் இல்லை.

நீட் தேர்வு மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2016 முதல் நடைமுறையில் உள்ள நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களைத் தயார்படுத்துகிற வகையில் மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

எனவே, தமிழக அதிமுக அரசால் நீட் தேர்வையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீட் தேர்வில் பங்கேற்கிற மாணவர்களையும் அதில் வெற்றிபெறுகிற வகையில் பயிற்சி வகுப்புகளின் மூலம் தயார்படுத்தவும் முடியவில்லை.

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகளைச் சிதைத்து, சீர்குலைத்து படுகுழியில் தள்ளிய தமிழக ஆட்சியாளர்களுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். இவர்கள் செய்த குற்றத்திற்கு தமிழக மக்கள் அதிமுக அரசை மன்னிக்கவே மாட்டார்கள்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்