திமுக பிரமுகர் பொட்டுசுரேஷ் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார், அட்டாக் பாண்டியிடம் தீவிர விசாரணை நடத்தியும் முழுமையான பதிலைப் பெறமுடியவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டு சுரேஷ் 2013 ஜனவரி 31-ல் மதுரை டிவிஎஸ் நகரில் கொலை செய்யப்பட்டார். இதில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் முன்னாள் வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் அட்டாக் பாண்டி, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அட்டாக் பாண்டியை, மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 4 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. அவரை போலீஸார் விமானம் மூலம் நேற்று காலை மதுரைக்கு கொண்டு வந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் அட்டாக் பாண்டியை படம் பிடிக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், திடீரென முக்கியப் பிரமுகர்கள் வெளியேறும் பகுதி வழியாக அட்டாக் பாண்டியை போலீஸார் அழைத்துச் சென்றுவிட்டனர்.
தீவிர விசாரணை
நேற்று காலை 8 மணிக்கு மதுரை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் அலுவலகத்துக்கு அட்டாக் பாண்டி கொண்டு வரப்பட்டார். இப்பகுதியில் யாரும் நுழைந்துவிடாதபடி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு மேற்கொண்டனர். அங்கு மதுரை நகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா தலைமையில் நகர் உதவி ஆணையர் முத்துக்குமார், வழக்கின் விசாரணை அதிகாரி கோட்டைச்சாமி, சிறப்பு புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பெத்துராஜ் உட்பட பலரும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 8 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி எஸ்.பி. அன்புவும் திடீரென வந்து அவரிடம் விசாரணை நடத்தினார்.
பதில் சொல்ல மறுப்பு
பொட்டுசுரேஷ் கொலைக்கு முக்கியக் காரணம், இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா, கொலைக்கான சதித்திட்டம் உருவானது, குற்றவாளிகள் விவரம் குறித்து பல்வேறு கேள்விகளை போலீஸார் எழுப்பி பதில் பெற முயன்றனர். பொட்டு சுரேஷின் செயல்பாடுகள் குறித்தும், இதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் சில தகவல்களை அட்டாக் பாண்டி தெரிவித்துள்ளார். ஆனாலும், என்ன காரணத்துக்காக கொலை நடந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க அவர் மறுத்துள்ளார். இந்த பதிலைப் பெற போலீஸார் பல வழிகளில் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்காததால் தவித்தனர். இதனால், ஏற்கெனவே கைதானோர் அளித்த வாக்குமூலம், இதுவரை சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள் ளனர்.
அதிகாரிகள் காட்டிய ஆர்வம்
அட்டாக் பாண்டியிடம் நடக்கும் விசாரணை குறித்த தகவல்களைப் பெறுவதில், காவல்துறை உயர் அதிகாரிகளிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. காவல் துறையின் பல்வேறு பிரிவுகளிலுள்ள அதிகாரிகள், இது தொடர்பான தகவல்களை பல்வேறு வழிகளில் திரட்டியபடி இருந்தனர். மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், துணை ஆணையரிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். துணை ஆணையர் 3 முறை அட்டாக் பாண்டி வைக்கப்பட்ட அறையில் இருந்து வெளியே செல்வதும், திரும்புவதுமாக பரபரப்புடன் காணப்பட்டார்.
திமுக ஆட்சியில் பொட்டு சுரேஷ் மிகுந்த அதிகாரம் படைத்த வராக திகழ்ந்தார். இவருக்குப் போட்டியாக அட்டாக் பாண்டியும் மு.க.அழகிரி மட்டுமின்றி அவரது குடும்பத்தினரிடமும் நெருக்கமாக இருந்தார்.
இந்நிலையில் பொட்டுசுரேஷ் கொலை செய்யப்பட்டதால், அதன் பின்னணி குறித்து அட்டாக் பாண்டி என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆர்வம் அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஆளுங்கட்சியினரும், இந்த விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago