பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பரிந்துரை செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 12) வெளியிட்ட அறிக்கை:
"பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான முறைகேடு நடைபெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அதிகாரிகள் பங்கேற்புடன் முதல்முறையாக நடந்த மிகப் பெரிய ஊழல் இதுதான். தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற ஊழல்கள் எல்லாம் அரசியல்வாதிகள் தொடர்புடையவைகளாக இருந்தன. இந்த ஊழலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால், உள்ளூர் ஆளுங்கட்சியினருக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறைகேட்டில் ஊழல் அதிகாரிகள், விவசாயத் துறையில் உள்ள தற்காலிக ஊழியர்கள், இன்டெர்நெட் மையங்களின் உரிமையாளர்கள், சில இடங்களில் ஏஜெண்டுகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தில் 6 லட்சம் போலி பயனாளிகளை சேர்த்து ரூபாய் 110 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
ஆனால், முதல்வரோஇந்த ஊழலுக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி மத்திய அரசின் மீது பழி போடுகிறார். பிரதமர் உழவர் திட்ட உதவித் தொகை வழங்குவதற்கு பயனாளிகளை அடையாளம் காண இணைய வழியை கையாண்டது தான் இந்த ஊழலுக்கு காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகிறார்.
மத்திய அரசின் மீது மாநில முதல்வரே குற்றம்சாட்டுவதால் ரூபாய் 110 கோடி மெகா ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நேரத்திலும், இந்த முறைகேட்டை ஆட்சியாளர்களும் மறுக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமரின் உழவர் உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதை ஆன்லைன் முறைக்கு மத்திய அரசு மாற்றியதால், கரோனா காலத்தில் அதனை அதிகாரிகள் சரிபார்க்க முடியவில்லை என்று ஊழலை மூடிமறைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை மறுக்க முடியவில்லை.
இந்த முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் பாதி அளவு திரும்ப மீட்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிது என்று தெரியவில்லை. லாக் இன் பாஸ்வேர்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஒரே மாதிரியாக முறைகேடு நடந்துள்ளதை மத்திய விவசாயத்துறையும் ஒத்துக் கொண்டுள்ளது. எனினும், இதுபோன்ற முறைகேடு நாட்டின் வேறு எந்த பகுதியிலும் நடைபெறவில்லை என்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 5 லட்சத்து 85 ஆயிரம் போலிப் பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரூ.2,000 நிதியை அரசு திரும்ப எடுத்துக் கொண்டது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் போலி பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. இந்தியாவிலேயே, பிரதமர் பெயரால் நடைமுறையில் உள்ள பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் மிகப் பெரிய மோசடி நடந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
ஏற்கெனவே, உதவித் தொகை பெறும்போது அளித்த ஆதார் ஆதாரத்தின் அடிப்படையில், ஆவணங்களை திருட இத்தகைய முறைகேட்டில் இன்டெர்நெட் மையங்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவே கிராமந்தோறும் முறைகேடு நடத்த எளிதாகிவிட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மட்டும் 11 ஆயிரம் போலிப் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் அதிமுகவினர் சம்பந்தப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. வருவாய்த்துறை, விவசாயத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் கூட்டு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடியைப் போல தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியில் கட்டப்படுகிற தொகுப்பு வீடு கட்டுவதிலும் மெகா மோசடி நடைபெற்றுள்ளது. வீடு, கழிவறை கட்டும் திட்டத்தின் பயனாளிகள் கிராமசபை கூட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில், பாஸ்வேர்ட் மூலமாக விவசாயிகள் பெயரில் திருத்தம் செய்து மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 2016 முதல் 2019 வரை கட்டப்பட்ட வீடுகளுக்காக ரூபாய் 5,170 கோடி மாநில அரசின் பங்குத் தொகையுடன் மொத்தம் 8,968 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக வீடுகள், கழிவறைகள் கட்டுவதில் நடைபெற்ற மோசடியில் உள்ளுர் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எனவே, பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடி குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பப் பெற முடியுமா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்காமல், மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பது ஒன்றே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பரிந்துரை செய்ய வேண்டும்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago