கரோனா பேரிடர்க் காலத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப வழி தெரியாமலும் அதற்கான வசதி இல்லாமலும் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைக் களையவும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் வகையிலும் அவர்களுக்கான தனி நல அமைச்சகமும் நல வாரியமும் அமைத்திடத் தமிழக அரசு முன் வரவேண்டும் என வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் குவைத் மண்டல புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் குவைத் மண்டலத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குவைத் சிட்டியில் உள்ள ராஜ விக்ரமன் நினைவரங்கத்தில் நேற்று (செப்.11) மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைச் சங்கத்தின் மூத்த ஆலோசகர் அப்துல் அஜீஸ், அமைப்புச் செயலாளர் நூர் முகம்மது, தலைமை நிலையச் செயலாளர் இதாயத்துல்லாஹ் ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
''குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் இந்தியத் தூதர் சிபி ஜார்ஜுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் புதிய நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பேரிடர் மற்றும் தனிப்பட்ட பெருந்துயர்க் காலங்களில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் அவர்களுக்கெனத் தனி அமைச்சகத்தையும் தனியாக நல வாரியத்தையும் அமைத்திட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு இச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. கரோனா காலத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்கள் படும் வேதனைகளும் சொல்லி மாளாது. எனவே, தமிழக அரசு இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் மற்றும் நலவாரியம் அமைத்திடக் காலதாமதம் ஆகும் பட்சத்தில் இதுகுறித்து வெளிநாட்டில் வாழும் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது எனவும் இச்சங்கம் முடிவு செய்கிறது.
மத்திய - மாநில அரசுகள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் எடுத்து அனுப்பும் ஏஜென்டுகளை முறைப்படுத்தி போலி ஏஜென்டுகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத காரியங்களில் அப்பாவிகள் பலர் சிக்க வைக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை விடுதலை செய்ய இந்திய தூதரகமும், மத்திய - மாநில அரசுகளும் முயற்சி செய்யவேண்டும். மேலும், உண்மையான போதைப் பொருள் கடத்தல் ஆசாமிகள் யார் என்பதைக் கண்டறிந்து இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராத வண்ணம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தூக்கு தண்டனைக் கைதிகளான திருவாரூர் மற்றும் கடலூரைச் சேர்ந்த காளிமுத்து, சுரேஷ் குமார் ஆகியோரின் நிரந்தர விடுதலைக்காக முயற்சி எடுத்த குவைத் இந்தியத் தூதரகத்துக்குச் சங்கத்தின் சார்பில் மனதார வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகிறது. குவைத் பொது மன்னிப்பில் சுமார் 7 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்ப முயற்சி செய்த குவைத் இந்திய தூதரகத்திற்கு சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. எனினும், பொதுமன்னிப்பு கிடைக்கப்பட்டவர்களில் பலருக்கு இன்றுவரை அவசர கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) கிடைக்கவில்லை. இதையும் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய தூதரகத்தை சங்கம் வலியுறுத்துகிறது.
குவைத் அரசிடம் பேசிப் பல ஆயிரம் இந்தியர்கள் ஒயிட் பாஸ்போர்ட் பெற்ற பிறகும் தாயகம் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் பொது மன்னிப்பை வழங்கி அவர்களைப் பாதுகாப்புடன் தாயகம் அனுப்பிவைக்க இந்தியத் தூதரகம் உதவிட வேண்டும்.
குவைத்தில் வாழும் இந்தியர்களுக்காகக் குவைத் அரசுடன் பேசி இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை செயல்படுத்திட வேண்டும். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் எதிர்பாராத விதமாக மரணிக்க நேரிடுவோரின் குடும்பங்கள் சிரமத்திலிருந்து மீள்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே, இந்தியத் தூதரகம் இவ்விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி இன்சூரன்ஸ் திட்டத்தைக் கொண்டுவர வழி வகை செய்திட வேண்டும்''.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து நம்மிடம் பேசிய வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் குவைத் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் சா.நவ்சாத் அலி, ''சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்கள் விரைவில் தமிழக முதல்வருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். தேவைப்பட்டால் இந்திய மற்றும் தமிழக அரசால் கவனிக்கப்பட வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகச் சட்டரீதியிலான நடவடிக்கைகளும் எடுப்போம்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago