மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 12) வெளியிட்ட அறிக்கை:

"மதுரை தல்லாக்குளம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மாணவியை இழந்து வாடும் தந்தை காவல்துறை சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் தற்கொலையை மற்றொரு மரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நீட் தேர்வு நாளை நடைபெறும் நிலையில், தமது தற்கொலைக்கு நீட் குறித்த அச்சமும், மன உளைச்சலும் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டும், குரல் பதிவு செய்து விட்டும் அம்மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட நீட் தேர்வு, இந்தியாவின் எதிர்காலத் தூண்களில் ஒருவராக வர வேண்டியவரின் உயிரைப் பறித்துள்ளது. நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்தவர்கள் தான் மாணவி மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் போது, அது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் அது குறித்து ஆய்வு செய்து, மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மாணவர்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படும் வரை கல்வி என்பது மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. கல்வி என்பது மாநிலப் பட்டியலில் தான் இருக்க வேண்டும். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் கல்வி மாநிலப் பட்டியலில் தான் உள்ளது. மாநிலப் பட்டியலில் இருப்பதால் அந்த நாடுகளில் கல்வியின் தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. இன்னும் கேட்டால் கல்வி மாநிலப்பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் உலகின் 100 முன்னணி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

கல்வியைப் பொதுப்பட்டியலில் சேர்த்தது மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பது தான் உண்மையாகும்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழ்நாட்டையும், பிற மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்த நிலையிலும் கூட, தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லை. அதே நிலை நீடிக்க அனுமதிப்பது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பு சேர்க்கும் செயலாக இருந்திருக்கும்.

ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அனுப்பிய பிறகும் கூட, அதை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு மனம் வரவில்லை. மாறாக, தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை பரிசீலனைக்குக் கூட ஏற்காமல் மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.

நீட் தேர்வு என்பது ஒருபுறம் தனியார் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் காய்க்கும் மரமாக மாறி வருகிறது; மறுபுறம் மாணவர்களை பலி வாங்கும் பலிபீடமாக மாறியிருக்கிறது. சிறப்புப் பயிற்சி நிறுவனங்களின் நலன் கருதி இக்கொடுமை தொடர மத்திய அரசும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பது தான் மக்களாட்சித் தத்துவத்தின் சிறப்பு ஆகும். அதன்படி நீட் தேர்வு குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மத்திய அரசு முற்பட வேண்டும். அதற்காக நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் நீட் தேர்வை தொடர்வதா... கைவிடுவதா? என்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாமக தான் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மற்ற அமைப்புகளும் நீட்டுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். நீட் தேர்வுக்கான எதிர்ப்பு மக்கள் இயக்கமாக மாறினால் தான் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட முடியும்.

நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்