மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையை விடக் குணமடைந்து வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். நேற்று மட்டும் 6,185 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இது மக்களிடத்தில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் கோவை, ஈரோடு, சேலம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு வாரங்களில் கரோனா உச்சம் பெறும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். இதில் நாகையைத் தவிர்த்த மற்ற நான்கு மாவட்டங்களில் ஆரம்பம் முதலே தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தன.
டெல்லி சென்று வந்தவர்களால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கோயம்பேடு சந்தையால் கடலூர் மாவட்டத்திலும் தொற்றுப் பரவியதாகக் கூறப்பட்டது. இந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொட்டுப் பல நாட்களாகிவிட்டன. ஆனால் இப்படி எந்தவிதமான ஹாட் ஸ்பாட் காரணமும் இல்லாமலே நாகை மாவட்டத்தில் தொற்று பரவும் வேகம் அதிகரித்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆகஸ்ட் 15-ம் தேதி நிலவரப்படி நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,504. இந்த எண்ணிக்கை 25 நாட்களுக்குள் மிகவேகமாக அதிகரித்து நேற்று (செப்டம்பர் 10) தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,716 ஆக உயர்ந்துவிட்டது. நேற்று 131 பேரும், நேற்று முன்தினம் 172 பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொற்றுக்கு ஆளாவோரின் சராசரி எண்ணிக்கை 100-க்கும் மேலாகவே இருக்கிறது.
» போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் சாலையில் நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்
முதலில் நாகை அருகே உள்ள பரவை காய்கனிச் சந்தையில் இருவருக்கு ஏற்பட்ட தொற்று அந்தச் சந்தையை மூட வைத்தது. அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் இருவருக்கு ஏற்பட்ட தொற்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் பூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு சில வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவையும், மயிலாடுதுறை உள்ளிட்ட காவல் நிலையங்களும் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டன.
ஆனால், அப்போதெல்லாம்கூட தொற்றுப் பரவல் வேகம் குறைவாகவே இருந்தது. மூன்றாம் கட்டத் தளர்வுகளுக்குப் பிறகு மக்கள் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்த பிறகுதான் நாகை மாவட்டத்தில் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர், திருமணஞ்சேரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்கள் ஒன்றுகூடும் இடங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. அப்படி கட்டுப்பாடாக இருந்தபோதும் கரோனா பரவல் வேகம் அதிகரித்தது எப்படி என்பது அதிகாரிகளுக்கும்கூட புரியவில்லை.
மக்கள் கரோனா விவகாரத்தை இயல்பாக எடுத்துக் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள். முகக்கவசம் அணிவதில்லை, கூட்டமாகக் கூடும் இடங்களைத் தவிர்ப்பதில்லை, காய்கனி, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. இதெல்லாமே தொற்றுப் பரவல் வேகம் அதிகரிக்கக் காரணமாகிவிட்டது என்பது அதிகாரிகள் தரப்பு விளக்கம்.
நாகை மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய இடம் இல்லாததால் ஏழு நாட்களுக்கு உள்ளாகவே நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். தனிமைப்படுத்தும் முகாம்களிலும் போதிய மருத்துவ கவனிப்பு இல்லை
இதுகுறித்து நாகை மாவட்டக் கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலர் மருத்துவர் லியாகத் அலியிடம் கேட்டதற்கு, “நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா பரவல் வேகம் கட்டுக்குள்தான் இருக்கிறது. கடந்த மாதத்தில் இரட்டிப்பு வேகம் 26 நாட்களாக இருந்தது. இந்த மாதமும் அது 25 நாட்களாகவேதான் இருக்கிறது. இருந்தாலும் தலைமைச் செயலாளர் சொன்னதை ஏற்று நேற்று மாலையே மாவட்ட ஆட்சியர் இது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
தொற்றுக்கு ஆளானவர்களை உடனடியாகக் கண்டறிந்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்துவது, தனிமைப்படுத்தும் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிகரிப்பது ஆகியவற்றை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ஆட்சியர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
கிராமங்கள்தோறும் தற்போது நோய் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மை நாட்கள் முன்பு வரை தினமும் 300 முதல் 400 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தினந்தோறும் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனால்கூட தொற்றுப் பரவல் எண்ணிக்கை உயர்ந்து காணப்படலாம். இருந்தாலும் இது மற்ற மாவட்டங்களை விட மிகக் குறைவுதான். பாதிப்பு மேலும் உச்சம் பெறாமல் இருக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக முக்கியம்" என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago