மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் காட்டில் குடிசையில் வசித்து வரும் மாணவிக்கு அரசு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் குடிசையில் வசித்து வரும் மாணவியிடம் அரசு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று வழங்கினார்.

பெருங்களூர் அருகே உள்ள போரம் வடக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி செல்வமணி. இவர்களது மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் சத்யா, நிகழாண்டு பிளஸ் 2 முடித்துள்ளார்.

தந்தை இறந்துவிட்ட நிலையில், சத்யா தினக்கூலி வேலைக்கு சென்று மனநோயாளியான தாயாரை காப்பாற்றி வருகிறார். மனைப்பட்டா, வீடு இல்லாமல் காட்டில் குடிசையில் தங்கியுள்ள இவர்களின் நிலை குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் செப்.4-ம் தேதி படங்களுடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, சத்யாவின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல்வேறு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி அன்றே உத்தரவிட்டார்.

அதன்படி, வருவாய்த் துறை அலுவலர்கள் சத்யா தங்கியுள்ள இடத்தை அன்றே ஆய்வு செய்தனர். அதில், குடிசை உள்ள இடம் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமானது என்பதால் பட்டா வழங்க இயலாது என்பதால், அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில், அரசு தொடக்கப் பள்ளி அருகே மனை தேர்வு செய்யப்பட்டது. அதற்கான மனைப்பட்டாவை செப்.7-ம் தேதி ஆட்சியர் வழங்கினார்.

இந்நிலையில், அந்த இடத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவை ஆட்சியர் அலுவலகத்தில் சத்யாவிடம் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று வழங்கினார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட செல்வமணிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்கான உத்தரவையும் அவரிடம் ஆட்சியர் வழங்கினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் சத்யாவின் உயர்கல்விக்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார். மாவட்ட மனநல திட்ட அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம் செல்வமணி, சத்யா ஆகியோருக்கு மனநல ஆலோசனை கூறியதுடன், செல்வமணியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

நிரந்தரமான மனை, வீடு கட்டுவதற்கான ஆணை, அரசு மகளிர் கல்லூரியில் பிஏ வரலாறு படிக்கும் வாய்ப்பு, அம்மாவுக்கு சிகிச்சை- உதவித்தொகை என அடுத்தடுத்து அரசின் பல்வேறு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு கண்ணீர் மல்க சத்யா நேற்று நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்