நடப்புகள்

மாணவர் சேர்க்கையில் சாதிக்கும் மாநகராட்சிப் பள்ளி

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி, கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் மாணவர் சேர்க்கையில் சாதனை படைத்துள்ளது.

2016-ல் 300 மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டு வந்த இப்பள்ளி, 2017-ம் ஆண்டில் புதிதாக 290 மாணவ, மாணவிகளை சேர்த்து, திருப்பூர் மாவட்ட தொடக்கப் பள்ளிகள் அளவில் சாதனை படைத்தது. அதேபோல, 2018, 2019-ம் ஆண்டுகளிலும் புதிதாக 240 மாணவர்களை சேர்த்து தொடர் சாதனை நிகழ்த்தியது. தனியார் பள்ளிகளைப்போல விளையாட்டு சீருடை, ஸ்மார்ட் வகுப்பு வசதி, 17 கம்ப்யூட்டர்களுடன் கூடிய கணினி வகுப்பறை, ஓவிய வகுப்பு, சிலம்பம், பரதம், பறை இசை, கராத்தே வகுப்புகள், பள்ளி சார்பில் இலவச காலண்டர், டைரி,வீட்டுப் பாடங்களை பெற்றோர்தெரிந்து கொள்ள எஸ்.எம்.எஸ்.வசதி, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட வகுப்பறை, கண்கவர் சுவர்ஓவியங்கள், அனைத்து வகுப்பறைக்கும் ஸ்பீக்கர் வசதி என, தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்த அரசுப் பள்ளியில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து, அந்த ஆண்டுக்கான திட்டங்களை வகுத்து,அதன்படி செயல்பட்டதால்,ஆசிரியர்கள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பெற்றோர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.ஆரம்ப நிலையில் 1-ம் வகுப்பில் 87 பேர், 2-ம் வகுப்பில் 12 பேர், 3-ம் வகுப்பில் 39 பேர், 4-ம் வகுப்பில் 37 பேர் மற்றும் 5-ம் வகுப்பில் 28 பேர் என 203 பேர் புதிதாக சேர்ந்துள்ளதால், தொடக்கப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 660-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளியில் படித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா ஊரடங்கால் பேருந்து வசதி இல்லாத நிலையிலும், தினமும்பலர் இப்பள்ளிக்கு வந்துகொண்டிருக்கின்றனர். எல்.கே.ஜி. வகுப்புகள் இன்னும் ஆரம்பிக்கப்படாததால், பலர் ஏமாற்றத்துடன்திரும்பிச் செல்கின்றனர். எனினும், மாணவர்களின் எண்ணிக்கை 660-ஐதாண்டியபோதிலும் ஆசிரியர் எண்ணிக்கை 11 மட்டுமே. எனவே, மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப, ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT