அதிமுக அரசு நீட் தேர்வை எதிர்ப்பதை போல கண்துடைப்பு நாடகத்தை நடத்தி வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:
"அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் 19 வயது நிரம்பிய விக்னேஷ் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கேரளாவில் உள்ள பயிற்சி மையம் மற்றும் துறையூரில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பயிற்சி பெற்று வந்தார். செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த விக்னேஷ் பொதுத் தேர்வில் 1,006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
அதன்பின் மருத்துவராக வேண்டுமென்று கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி, ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சியும் பெற்ற நிலையிலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மூன்றாவது முறையாக வருகிற செப்டம்பர் 13 அன்று நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்க கடுமையாக தயார்படுத்திக் கொண்டு வந்தார்.
இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று (செப். 9) அதிகாலை 4 மணி அளவில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது.
அதைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவரது தந்தை அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிற ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஏற்கெனவே இதே பகுதியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நீட் நுழைவுத் தேர்வு அனிதா என்ற இளம் மாணவியை பலிவாங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் அனிதா பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வரை நீதி கேட்டு போராடினார். ஆனால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவர் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அன்று அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல, தற்போது விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வினால் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
ஏற்கெனவே அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இதுவரை அந்த வழக்குகள் தமிழக காவல் துறையினரால் திரும்பப் பெறப்படவில்லை. இதனால் அந்த இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பையும், வேலைவாய்ப்பையும் இழந்துள்ளது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.
வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. கரோனா தொற்று கடுமையாக இருக்கிற சூழலில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவப் படிப்பில் சேர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், எந்த கோரிக்கையையும் மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொள்ளாமல் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்திருக்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத ஏழை, எளிய கிராமப்புற மக்கள், பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தடையாக இருக்கிறதே என்ற மன உளைச்சலின் காரணமாக அனிதா, விக்னேஷ் போன்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அதிமுக அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பதை போல கண்துடைப்பு நாடகத்தை நடத்தி விட்டு, இந்த ஆண்டிலும் நீட் தேர்வு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, அனிதா, விக்னேஷ் போன்றவர்களின் தற்கொலை சாவுகளுக்கு மத்திய - மாநில அரசுகளே பொறுப்பாகும். இதற்குரிய பாடத்தை தமிழக மக்கள் விரைவில் வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் என்ற மாணவரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மறைந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago