ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடையில்லை; வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்குமாறு கோரப்பட்ட வழக்கை முடித்து வைத்துள்ள உயர் நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புக்குத் தடையில்லை, வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆன்லைனில் மாணவர்கள் பங்கேற்கும்போது ஆபாச இணையதளங்களும் அவ்வப்போது குறுக்கிடுகின்றன. இதனால் அவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆபாச இணையதளங்கள் குறுக்கீடு செய்யாத வகையிலும், அதுபோன்ற இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையிலும் சட்ட ரீதியாக விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சரண்யா, விமல் மோகன், பரணீஸ்வரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் விதிகளை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் நேரமும் அறிவிக்கப்பட்டது.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களைக் காண நேரிடும் எனவும், இதைத் தடுக்க உரிய விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

டிஜிட்டல் கல்வி நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளைப் பின்பற்றாத பள்ளிகளுக்கு எதிராகப் புகார்கள் வந்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் மட்டுமல்லாமல், பள்ளிகள் தரப்பிலும், ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளதாகத் தெரிவித்து ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர்.

*ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

*அரசுகள் வகுத்துள்ள ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அவற்றிற்கு இடையிலான இடைவெளி நேரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

*விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் கண்காணிக்கக் குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

*ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச இணையதளங்களைப் பார்க்க நேரிட்டால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.

* வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பெற்றோர் ஆசிரியர் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற 14 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்