அருந்ததியர் உள் ஒதுக்கீடு, முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை திமுக பொதுக்குழு வரவேற்றுள்ளது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (செப். 9) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
"அருந்ததியினர் உள் ஒதுக்கீடு தொடர்பான சமூக நீதித் தீர்ப்புக்கு வரவேற்பு!
திமுக ஆட்சியில் 7.6.1971-ல் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 16 சதவீத இட ஒதுக்கீடு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு, 1990-ல் அந்த 18 சதவீதத்தையும் முழுமையாகப் பட்டியலின மக்களுக்கே உரித்தாக்கி, தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை 22.6.1990 அன்று பழங்குடியின மக்களுக்கு மட்டுமே அளித்து, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 19 சதவீதமாக உயர்த்தியதோடு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வரலாற்றை உருவாக்கி, சமூக நீதியின் பிறப்பிடமாக இந்தியாவில் தனித்துவம் பெற்று, தமிழகம் பெருமையுடன் தலைநிமிர வைத்தவர் கருணாநிதி.
இந்தச் சூழ்நிலையில் 29.4.2009 அன்று, அருந்ததியினர் சமுதாயத்திற்கான உள் ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு, இன்றைக்கு அருந்ததியினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு உயர்ந்த வழியாக இருந்து வரும் அந்த உள் ஒதுக்கீட்டை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதை இந்தப் பொதுக்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
இத்தீர்ப்பு, திமுக அரசு உருவாக்கி வளர்த்த சமூக நீதி எனும் நந்தவனத்தில், ஒரு நந்தா விளக்கினை ஏற்றித் தந்திருக்கிறது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதி, யாராலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாமல் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதைபெருமிதத்துடன் இப்பொதுக்குழு பதிவு செய்ய விழைகிறது.
மருத்துவக் கல்வியில் கழகம் நிலைநாட்டிய சமூக நீதி!
மத்தியத் தொகுப்புக்குத் தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டசமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு, இட ஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது, என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக இந்தப் பொதுக்குழு வரவேற்கிறது.
திமுக தொடுத்த சமூக நீதிக்கான சட்டப் போராட்ட வழக்கில், இந்தத் தலைமுறையை மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்றும் தொலைநோக்குச் சிந்தனையும் சிறப்பும் கொண்ட இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு, கருணாநிதி வகுத்தளித்த வழியில் பாடுபட்டு, வழக்கில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தப் பொதுக்குழு இதயம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில், இந்தக் கல்வியாண்டே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டினையும், பட்டியலின மாணவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு!
திமுக ஆட்சியில் கருணாநிதி, மூன்றாவது முறையாக முதல்வரான 1989-ல், முதன்முதலில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கி, நான்காவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, உள் ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் அரசு மருத்துவர்களுக்கான 9.2.1999 அன்று வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டு, அதை உச்ச நீதிமன்றம்வரை, திறமையாக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்.
ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, கிராமங்கள், மலைப் பகுதிகள், மிகுந்த சிரமமான பகுதிகள் ஆகியவற்றில் மக்களுக்குச் சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து அரசாணை பிறப்பித்து, தனது ஆட்சிக் காலம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டுமின்றி, தமிழக அரசின் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் கருணாநிதி.
கருணாநிதி வழங்கியிருக்கும் அந்த உள் இட ஒதுக்கீடு செல்லும் என்றும், அதில் குறுக்கிட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லையென்றும், 31.8.2020 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தப் பொதுக்குழு மனமார வரவேற்று மகிழ்ச்சி கொள்கிறது".
இத்தீர்மானங்கள் திமுகவில் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago