ஊதிய உயர்வை உடனடியாக வழங்க தூய்மை காவலர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு 110 விதியின்கீழ் தொகுப்பு ஊதியம் உயர்த்தி வழங்கப் போவதாக, முதல்வர் அறிவித்த ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைகாவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பு ஊதியம் 2,600 ரூபாயில் இருந்து 3,600 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பு ஊதியம் 2,600 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் 110 விதியின்கீழ் அறிவித்தார்.

தூய்மை காவலர்கள் காலநேரம் பார்க்காமல் கிராமங்களில் தேங்கும் குப்பையை, பிரித்தெடுக்கும் பணியை செய்து வருகின்றனர். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.80 வீதம்மாதம் ரூ.2,400 சம்பளம், ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

ஏப்ரல் மாதம் உயத்த வேண்டிய ரூ.1,000 இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதேபோல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் கிணற்றில் போட்ட கல்போல் உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அது எப்படியும் அரியர்ஸ்போட்டு வந்துவிடும் என சொல்கிறார்கள். தற்போது விலைவாசிஅதிகமாக உள்ளது. இந்த வருவாயை கொண்டு குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. கரோனா நேரத்தில் பணியாற்றும் துய்மை காவலர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வை விரைந்துவழங்க வேண்டும் என ஊராட்சி பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE