தமிழகத்தில் அலுவலரை நியமிக்கும் போது தமிழ் மொழி தெரியாத, இந்தி மொழி மட்டும் தெரிந்தவரை அலுவலராக நியமிப்பதை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை எனில் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் பா. பாலமுருகன் பரபரப்பாக குற்றச்சாட்டு கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இவர் இந்தியை அலுவல் மொழியாக பரப்புகிற பிரிவில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு இந்தி மொழி தெரியாது. ஆனால், இந்தி மொழி பரப்புகிற பணி இவர் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களை இப்பணிக்கு நியமிக்காமல் தமிழை தாய் மொழியாகக் கொண்ட, இந்தி மொழி தெரியாத இவரை இந்தி மொழி பரப்புகிற பணியில் அமர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
» காங்கிரஸ் மாவட்ட தலைவரை கன்னத்தில் அறைந்த மதுரவாயல் உதவி ஆணையர்: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
இத்தகைய போக்குகள் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்தி பேசாத மக்கள் மீது, இந்தியை திணிக்கிற கடுமையான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்து குரல் எழுப்பிய உதவி ஆணையர் பா. பாலமுருகன் நமது பாராட்டுக்குரியவர். அவரது உரிமைக் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில், கடும் விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.
இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்ற அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், 24.4.1963 அன்று மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நேரு, 'எல்லா 14 மொழிகளும் தேசிய மொழிகள் என நமது அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒரு மொழி, மற்ற மொழியை விட தேசியமானது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியதோடு, இந்தி பேசாத மக்களுக்கு காலத்தால் அழியாத உறுதிமொழியை வழங்கினார்.
அதில், 'ஆங்கிலம் துணை மொழியாகவும், மாற்று மொழியாகவும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை தொடர்ந்து இருக்கும். அது எவ்வளவு காலத்திற்கு என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை இந்தி மொழி அறிந்த மக்களிடம் விடாமல், இந்தி மொழி அறியாத மக்களிடமே விடுவேன்' என்று கூறினார். நேருவின் உறுதிமொழியை தொடர்ந்து பிரதமர்களாக வந்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் காப்பாற்றினார்கள்.
இந்தி பேசாத மக்களுக்கு நேரு வழங்கிய உறுதிமொழிக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்கிற வகையில் ஆட்சி மொழிகள் சட்டத்தில் 1967 இல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மத்திய அரசுக்கும், இந்தி மொழியை ஆட்சி மொழியாக கொள்ளாத மாநிலத்திற்கும் இடையே செய்தி தொடர்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்படும்.
இந்தி மொழியை ஆட்சி மொழியாக கொண்ட மாநிலத்திற்கும், ஆட்சி மொழியாக கொள்ளாத மாநிலத்திற்குமான செய்தித் தொடர்பில் இந்தி பயன்படுத்தப்படுமாயின், அச்செய்தி தொடர்புடன் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு 'கட்டாயமாக' இணைக்கப்பட வேண்டும்.
மேலும், அச்சட்டத் திருத்தத்தில், 'இந்தி மொழியை ஆட்சி மொழியாக எல்லா மாநிலங்களின் சட்டசபைகளும் ஆங்கில மொழியை சட்டத்தில் குறிப்பிட்ட காரியங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்தி விடலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, இத்தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தை நிறுத்தக் கோரும் ஒரு தீர்மானத்தை பாராளுமன்ற இருசபைகளும் நிறைவேற்றும் காலம் வரை இந்நிலை நீடிக்கும்' என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நேருவின் உறுதிமொழிக்கு நிரந்தர சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, எந்த காலத்திலும், எந்த நிலையிலும், எந்த வடிவத்திலும் நேருவின் உறுதிமொழிக்கு எதிராக இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க முடியாது என்ற உறுதியான நிலையை இச்சட்டத்திருத்தம் ஏற்படுத்தியிருக்கிறது.
நேரு வழங்கிய உறுதிமொழி மற்றும் ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை, இந்தி பேசாத அலுவலகப் பணியாளர்கள் மீது திணிப்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசின் அலுவலர்களில் மூன்றில் இரண்டு பேர் இந்தி மொழி அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று உதவி ஆணையர் பாலமுருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் உண்மையில்லை என்று எவரும் கூற முடியாது. இத்தகைய நிலை நீடிப்பதை எவரும் அனுமதிக்க முடியாது.
எனவே, இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தி மொழி அறிந்த வேற்று மாநிலத்தவரை அலுவலராக நியமிப்பதை தவிர்த்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படும் போது தான் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு மனநிறைவு ஏற்படுகிற வகையில் மத்திய அரசின் அலுவலகங்கள் செயல்பட முடியும்.
தமிழகத்தில் அலுவலரை நியமிக்கும் போது தமிழ் மொழி தெரியாத, இந்தி மொழி மட்டும் தெரிந்தவரை அலுவலராக நியமிப்பதை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை எனில் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்”.
இவ்வாறு கே.எஸ். அழகிரி எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago