பாரதியார் பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினராக பாஜக மாநில துணைத்தலைவரை நியமித்துள்ளதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். வேந்தர் ஆளுநர் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் அல்லது முதல்வர் தலையிட்டு ராஜினாமா செய்ய வைக்கவேண்டுமென முன்னாள் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்ட அறிக்கை:
“பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதியை, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக தமிழக ஆளுநர் நியமித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே அவர், “பா.ஜ.க.,வின் அறிவுசார் அணி”யின் துணைத் தலைவராகப் பணியாற்றிய போதுதான், இப்பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பு, தமிழக பாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது, மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக - இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 3 சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், 'வேந்தர்' என்ற முறையில் தமிழக ஆளுநர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி, 'பாரதியார் பல்கலைக்கழகச் சட்டம் - 1981'- ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், “கல்வி வல்லுநர்களை” சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிப்பதற்குத்தானே தவிர, பாரதீய ஜனதா கட்சியில் உள்ள துணைத் தலைவர் ஒருவரை நியமிக்க அல்ல!
அரசியல் கட்சியில் உள்ளவரை, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க அந்த அதிகாரத்தை ஆளுநர் அவர்கள் பயன்படுத்தியிருப்பது, மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும். பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு, “புதிய தேசிய கல்விக் கொள்கை” விவாதத்தில் ஒருபுறம் பங்கேற்றுக் கொண்டு - இன்னொரு பக்கம், பாஜகவில் அங்கம் வகிக்கும் நிர்வாகி ஒருவரை பல்கலைக்கழகத்திற்கு நியமிப்பது, எந்த வகையில் நியாயம்?
பல்கலைக்கழகக் கல்வியை காவிமயமாக்க - ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க, அரசியல் சட்டப் பதவியில் அமர்ந்துள்ள ஆளுநர் இறங்கி வந்திருப்பது ஏன்? இந்த நடவடிக்கை; சட்டம், வேந்தருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் - சட்டமன்ற ஜனநாயகம், ஆளுநர் மீது வைத்த நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
சிண்டிகேட் உறுப்பினரை நியமிக்க அதிகாரம் அளித்துள்ள அதே சட்டத்தில் உள்ள பிரிவு 10(2)ல், “இதுபோன்ற நியமனங்களைச் செய்யும் முன்பு, துணை வேந்தருடன் கலந்து ஆலோசித்து வேந்தர் நியமிக்க வேண்டும்” - என்று தெளிவாக இருக்கின்ற போது, பாஜகவில் உள்ள துணைத் தலைவர் ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க, துணை வேந்தர் எப்படிப் பரிந்துரை செய்தார்?
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், எப்படி இதை அனுமதித்து வேடிக்கை பார்த்தார்? பல்கலைக்கழகங்களில் நாங்கள் ஊழல் செய்து கொள்கிறோம். பாஜக,வினரை நீங்கள், சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளுங்கள்” என்ற ரகசிய ஒப்பந்தம், பாஜகவைற்கும், அதிமுகவிற்கும் இடையே போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
உயர்கல்வியின் தரத்தைச் சீர்குலைத்து - கல்வியைக் காவிமயமாக்க பாஜகவிற்கு அதிமுக அரசு விரித்துள்ள இந்தச் சிவப்புக் கம்பள வரவேற்பிற்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக கனகசபாபதியை நியமித்த உத்தரவை, ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்.
அப்படியில்லையென்றால், உயர்கல்வித் துறை அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ, ஆளுநருக்கு அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து, பாஜக துணைத் தலைவரை, பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago