பதவியேற்பு விழாவில் ராஜபக்சே: திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு - கருணாநிதி மவுனம்

By செய்திப்பிரிவு

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்‌சே கலந்து கொள்ள இருப்பது குறித்து, கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், திமுக நிர்வாகிகள் மட்டும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாஜகவின் நாடாளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்‌சே கலந்துகொள்வதற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழீழப் பிரச்சினையில் டெசோ அமைப்பின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் திமுக இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.

இலங்கைப் பிரச்சினைக்காக கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து வெளியேறிய திமுக, இந்த முறை இலங்கை அதிபர் ராஜபக்‌சேவை அழைத்துள்ள பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது. பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும், அதிபர் ராஜபக்‌சேவின் வருகை குறித்து கருத்துகளை வெளியிடவில்லை.

இந்நிலையில், திமுக தலைமைக் கழக நிர்வாகிகளான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ராஜபக்‌சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழின அழிப்புக்கு பொறுப்பேற்று சர்வதேச நாடுகளின் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டிய ராஜபக்‌சே, இந்திய அரசின் வரவேற்புடன் இந்திய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பது தமிழர்களுக்கு வேதனை தரும் செயல்.

லைபீரிய நாட்டில் இன அழிப்புக் குற்றச்சாட்டுக்காக லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லர், லண்டன் சிறையில் அடைக்கப்பட்டது போன்று, ராஜபக்‌சே மீதும் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே பாஜகவும், பிரதமராகவிருக்கும் மோடியும் தமிழர்களின் உணர்வை மதித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “தமிழக மக்களின் உணர்வுகளை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையால் தமிழக மக்கள் இலங்கை மீது கோபத்தில் இருக்கின்றனர். எனவே, நரேந்திர மோடி தமிழர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்