அதிமுக அரசின் ஊழலுக்கு உடந்தையா பாஜக ?- ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளும், ஆள்வோருடன் கூட்டுச் சேர்ந்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என மேடையில் விமர்சனம் செய்த பாஜக தலைவர்கள், தேர்தலில் அதே ஊழல் ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார்கள் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா காலத்திலும் 'கொள்ளை ஒன்றே உயிர்மூச்சுக் கொள்கை' எனச் செயல்பட்டு வருகிறது பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. ப்ளீச்சிங் பவுடர் முதல் முகக்கவசம் வரை எல்லாவற்றிலும் ஊழல்..! ஊழல்... ஊழலோ ஊழல்... ஊழலைத் தவிர வேறெதுவும் இல்லை.

மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. வரிக்குரிய மாநிலத்தின் பங்கு வந்து சேரவில்லை என்றும், கரோனா பேரிடரை எதிர்கொள்வதற்காக மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை என்றும் முதல்வர் பழனிசாமி, எஜமானருக்குப் பணிந்த வேலையாள் போல, மயில் இறகு கொண்டு தடவிக் கொடுப்பதைப் போல, மெல்லிய குரலில் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதுகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மாநில அரசு கேட்கின்ற தொகையை முழுமையாக வழங்கிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

மாநிலத்தின் உரிமைகளுக்காக மத்திய அரசிடம் ஓங்கிக் குரல் கொடுக்கவே அஞ்சுகிற அதிமுக. ஆட்சியாளர்கள்தான், மத்திய அரசு ஒதுக்குகிற குறைந்தபட்ச நிதியிலும் கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்பதை, ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகின்றன.

பிரதம மந்திரியின், விவசாயிகளுக்கான ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை, விவசாயிகளுக்கு வழங்காமல், முதல்வர் பழனிசாமி போலவே ‘விவசாயி’ என்று சொல்லிக் கொள்ளும் போலிகளுக்கு வழங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்து 700 பேரை, விவசாயிகள் என்று போலியாகக் கணக்குக் காட்டி, பிரதமரின் திட்டத்தில் 4 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்ததால், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் மட்டுமா ஊழல்? தமிழகம் முழுவதும் கரோனா போலவே நீக்கமற நிறைந்திருக்கிறது அதிமுக அரசின் ஊழல். கடலூர் மாவட்டத்தில், 'போலி விவசாயிகள்' கணக்கில் சூறையாடப்பட்ட பிரதமர் நிதியிலிருந்து 4 கோடியே 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடியே 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன.

வேளாண் துறையில் தங்களுக்குக் கைப்பாவையாக உள்ள அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலமாக இந்த மோசடிகளை அதிமுக அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஊரடங்காலும், கரோனா நோய்த் தொற்றுப் பரவலாலும், போதிய அளவு பயிர்ப் பாதுகாப்பு இல்லாததாலும், வாழ்வாதாரம் இழந்து வாடி நிற்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமையாக இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் மட்டுமல்ல, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியிலும் மாபெரும் ஊழல் நடந்தது பற்றி சில வாரங்களுக்கு முன் ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாயின.

'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற வகையில், திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி வட்டம் - தலையாமங்கலத்தில், ஏறத்தாழ 150 வீடுகள் கட்டப்பட்டதாகப் பொய்க் கணக்குக் காட்டி, பயனாளிகள் பெயரில், தலா ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் என்ற வகையில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, 2018-ம் ஆண்டிலேயே இறந்துபோன ஜெயச்சந்திரன் என்பவர் பெயரில், 2019-ம் ஆண்டில் 4 தவணைகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், கட்டுமானப் பொருட்களுக்காக 55 ஆயிரம் ரூபாய் என்றும் ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

இறந்தவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பண மோசடி நடந்துள்ளது. வீடு கட்டப்படவில்லை. இதுபோலவே, உயிரோடு இருப்பவர்கள் பெயரிலும் மோசடி நடந்துள்ளது. தங்கள் பெயரில் பண மோசடி நடந்திருப்பதை அறியாத அப்பாவி மக்கள் பலர், இன்னமும் ஒழுகும் குடிசைக்குள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளும், ஆள்வோருடன் கூட்டுச் சேர்ந்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என மேடையில் விமர்சனம் செய்த பாஜக தலைவர்கள், தேர்தலில் அதே ஊழல் ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார்கள்.

கோட்டை முதல், அமைச்சர்களின் பங்களாக்கள் வரை சோதனை நடத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதும் தெரியவில்லை.

மக்கள் மறந்து விட்டதாக நினைக்கிறார்கள், இவை போன்ற காரியங்களை மக்கள் ஒருபோதும் மறப்பதுமில்லை, மன்னிப்பதுமில்லை, நேரம் வரும்போது கடுமையாகத் தண்டித்து விடுவார்கள். 'ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி' எனப் பெருமை பேசிக்கொண்டே, அதிமுகவினரின் ஊழலை மறைத்து, அரசியல் இலாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா?

அதிமுகவின் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கிறதா பாஜக? என்கிற கேள்வி, பாமர மக்களின் மனதிலும் எழுகிறது, அந்தக் கேள்வி, அப்படியே நின்று வளரும் தன்மை கொண்டது. பிரதமரின் பெயரிலான விவசாய நிதி உதவியிலும், வீடு கட்டும் திட்டத்திலும் அப்பட்டமாக ஊழல் செய்துள்ள அதிமுக ஆட்சியாளர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்