காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது: தேமுதிக முப்பெரும் விழாவில் விஜயகாந்த் நம்பிக்கை

By ஆர்.கிருபாகரன்

காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் பதிலடி கொடுத்து, தேமுதிகவை ஆட்சியில் அமர்த்துவார்கள் என கோவையில் நடந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் தேமுதிக சார்பில் 'மக்களுக்காக மக்கள் பணி' என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்கம், விஜயகாந்த் பிறந்த நாள் மற்றும் வறுமை ஒழிப்பு தினம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் தினம் என முப்பெரும் விழாவாக இப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.40 லட்சம் கோடி முதலீடு வந்து விட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான சிறு, குறு, முதலீட்டாளர்கள் வேலையிழந்து உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சாலைகள், திட்டங்களை வெள்ளை அறிக்கையாக மக்கள் மத்தியில் அரசு வெளியிட வேண்டும். வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஏதுமில்லை என்பது போல, இந்த மாநாட்டையும் மாற்றி விடக்கூடாது.

கிரானைட் குவாரி மோசடிகளை விசாரித்து வரும் சகாயம், விஜயகாந்தைப் போலத் தெரிகிறார். அதே மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த் தான் அவருக்கு உதாரணமாக இருக்கிறார். நரபலி உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ள சகாயத்துக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

தேமுதிக ஆட்சியில் தமிழகம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு அவரே எடுத்துக்காட்டு. விஜயகாந்த் நடித்த படங்கள் தான் தமிழக காவல்துறைக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது. விஜயகாந்த், போலீஸ் அதிகாரிகளுக்கே உதாரணமாக இருக்கிறார் என்றார்.

தலைப்புச் செய்தியாகும்...

விஜயகாந்த் பேசியதாவது: தெய்வத்தையும், மக்களையும் மட்டுமே நான் நம்புகிறேன். பெண்களே சக்தி என்பதால் அவர்களை மதிக்கிறேன். அவர்கள் என் பின்னால் இருப்பதால் 2016-ல் தேமுதிக ஆட்சி அமைக்கும். அப்போது நம்மை எதிர்ப்பவர்கள் எங்கிருப்பார்கள் என்றே தெரியாத நிலை ஏற்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு செய்கிறார்கள். ஆனால் ரேஷன் கடையில் உள்தாள் ஒட்டும் நிலையை இவர்களால் மாற்றிவிட முடிந்ததா? மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற முடிந்ததா? காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.

தற்போதைய சூழலில் நீதித்துறையின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 100 முறை நோட்டீஸ் அனுப்பினாலும் அரசிடமிருந்து பதில் வருவதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதியே கூறுகிறார். மக்கள் நீதித்துறையைத் தான் நம்புகிறார்கள். ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இந்த ஆட்சிக்கு தேவையில்லை. தேர்தல் கூட்டணிக்காக நாங்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. யாரை எப்போது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். 2016-ல் எங்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

அதுதான் அன்று தலைப்புச் செய்தியாக அமையும் என்றார்.

நலத்திட்ட உதவிகள்

பொதுக்கூட்டத்தின்போது, நீண்ட நாட்களாக கட்சியில் பணியாற்றிய, நலிவடைந்த தொண்டர்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர், சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.

உறுப்பினர் சேர்க்கையை மையப்படுத்தி, புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றும் இந்த பொதுக் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது. விழாவில், மாவட்டச் செயலாளர் தமிழ்முருகன், சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தினகரன், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சி

பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் புகழைப் பாடும் வகையில் அவர் நடித்த திரைப்படங்களின் பாடல்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நடனக் கலைஞர்கள் நடனமாடியபோது அவர்களுக்கு நடுவே மாலை அணிந்தபடி விஜயகாந்த் எழுந்து நின்று லேசான நடன அசைவுகளைக் கொடுத்தார். மேலும் பெரியார், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் தோற்றங்களில் வந்த மேடை நாடகக் கலைஞர்களுடன் நின்று விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்