கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் நல்ல மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பாண்டு பருவமழை போதிய அளவில் கைகொடுத்ததாலும், அணைகளில் நல்ல நீர்மட்டம் இருப்பதாலும், மாவட்டம் முழுவதும் உள்ள 6,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 120 நாட்களில் விளையும் கட்டை ரகமான அம்பை-16 ெநற்பயிர்கள் விளைந்த நெல்மணிகளுடன் காட்சியளிக்கின்றன.
முன்கூட்டியே நடவு செய்த சுசீந்திரம், பறக்கை, தேரூர், பெரியகுளம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்போது நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடைப் பணிக்காக 100-க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளன. தொடர்ந்து இம்மாதம் இறுதிவரை நெல் அறுவடை பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
மாவட்டம் முழுக்க அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும், இடையில் கடும் வெயில் சுட்டெரித்து வருவது, நெல் அறுவடைக்கு சாதகமாக உள்ளது. அம்பை -16 நெல் ரகம் அறுவடையின்போது நல்ல மகசூலைக் கொடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் இதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 இடங்களில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஓரளவு விவசாயிகள் நெல்களை விற்பனை செய்து வருகின்றனர். செண்பகராமன்புதூர், தேரூர், வடசேரி, திங்கள்நகர், புத்தளம், திட்டுவிளை, தாழக்குடி ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு கிரேடு-ஏ ரக நெல்லுக்கு ரூ.1,835, பொதுரக நெல்லுக்கு ரூ.1,815 என, அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலையை ஒப்பிட்டு அறுவடையாகும் வயல்களுக்கு நேரடியாக வரும் அரவை மில்தாரர்கள் நெல்லை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
சில இடங்களில் ஈரப்பதத்தை காரணம் காட்டி, குவிண்டாலுக்கு ரூ.1,600 என நெல் விலையை குறைத்து வருவதாகவும், ஒரே விலை வைத்து நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தற்போது முதல் கட்டமாக 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள நெல் வயல் களில் அறுவடை நடந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளில் இந்த மாதம் முழுவதும் பரபரப்பாக நெல் அறுவடை நடைபெறவுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் அடுத்த கும்பப்பூ சாகுபடிக்காக வேளாண்துறை பரிந்துரைப்படி பொன்மணி ரகம் நடவு செய்யப்படவுள்ளது. இதற்கான விதை நெல் தட்டுப்பாடின்றி வழங்க வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்மணி நெல் ரகத்தை நாற்றங்காலுக்காக பாவும் பணி இன்னும் 15 நாட்களில் தொடங்கவுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால், ஊரடங்கால் 5 மாதமாக வேலையின்றி தவித்த விவசாயத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர், அறுவடை, மற்றும் அதை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நில குத்தகைதாரர்கள் தவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வயல்களை குத்தகை எடுத்து நெல் விவசாயம் செய்தவர்கள் அரசின் வழிமுறைப்படி நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை விற்கமுடியாமல் தவித்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய, கரத்தீர்வை ரசீது, பட்டா நகல், சிட்டா நகல், அடங்கல் ஆகியவற்றை வழங்கவேண்டும். நிலம் குத்தகைதாரர்களிடம் இவற்றை நில உரிமையாளர்கள் வழங்குவதில்லை. இதனா,ல் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை விற்பனை செய்ய முடியாமல், தனியார் ஆலைகளுக்கே விற்பனை செய்து வருகின்றனர். குத்தகை விவசாயிகளும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago