நண்பர், பெற்றோர், உளவியலாளர், சமூக விவசாயி: ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

By செய்திப்பிரிவு

நிகழ்காலச் சூழலில் ஆசிரியர் என்பவர் தனது பணியைப் பல அடுக்குகளில் பரிமளித்துக் கொள்பவராக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது. ஆசிரியரைச் சமூக விவசாயி என்கிறார்கள் எழுத்தாளர்கள். ஓர் ஆசிரியர் சிறந்த கல்விச் சிந்தனைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். ஓர் ஆசிரியர் என்பவர் சிறந்த சமூகச் சீர்திருத்தங்களை மேற்கொள்பவராக இருக்க வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்கள் வாதம் செய்கின்றனர்.

சக நண்பன்...

வகுப்பறை மாற்றங்களை உருவாக்கும் சிந்தனையும் செயல்திறனும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது கல்வித் துறையின் எதிர்பார்ப்புகள். பெற்றோருக்கோ தங்கள் குழந்தைகளை மிகப்பெரிய வேலை வாய்ப்புக்குத் தயார் செய்யும் தகுதியுடையவராக ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கோ தங்களது ஆசிரியர் சக தோழனாக, தோழியாக, பெற்றோராக எப்போதும் இருக்க வேண்டும் என்பதே மாறாத எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

கல்வி ஓர் அரசியல் செயல்பாடு , கற்பிப்பவரும் கற்றுக் கொள்பவரும் 50% ஆசிரியராகவும் 50% மாணவராகவும் தங்களை உணர வேண்டும் என்கிறார் ஃபாவ்லோ ஃபிரேயர்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குபவை கல்வி, பொருளாதாரம், சுகாதாரம். பின்னிரண்டின் வளர்ச்சிக்கும் மிக அடிப்படையாக அமைவது கல்வி மட்டுமே. அத்தகைய கல்வியை வழங்கும் பள்ளிக்கூடங்கள் முதல் கல்லூரிகள் வரை கணக்கில் கொண்டால், அவற்றுக்கு ஆதாரமாக இருப்பவர்கள் ஆசிரியரும் மாணவர்களும்தான். கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டில் சம பங்கு வகிப்பது ஆசிரியரும் மாணவரும் என்றால் அதுவும் மிகையாகாது.

ரசனைக்குரிய நாயகர்...

ஆசிரியரும் மாணவரும் இணைந்தால் என்ன செய்யலாம்? எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆம், வகுப்பறையின் இறுக்கத்தைத் தளர்த்தலாம். பள்ளிகளின் முகங்களை மாற்றலாம். இந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பாதை அமைக்கலாம். புதிய உலகம் படைக்கலாம். மாணவர்களின் வாழ்க்கைக் கனவுகளுக்கு விதை விதைக்கும் ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் மனதில் எந்நாளும் மாறாத நிலை பெற்று நின்று விடுகின்றனர். பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களின் முதல் ரசனைக்குரிய நாயகர்களாக அவர்களது ஆசிரியர்களே அமைந்து விடுகின்றனர்.

இரண்டாவது பெற்றோர்...

மாணவர்கள் தங்கள் வாழ்வின் நீண்ட பயணத்தை ஏறக்குறைய 12 ஆண்டு காலம் பள்ளி ஆசிரியர்களுடனேயே வாழ்கின்றனர். வீடும் பள்ளியும் அவர்களின் வளர்ச்சிக்குச் சரிபாதி பொறுப்பு எடுக்க வேண்டியதுதான் யதார்த்தம். எனில், பள்ளியில் ஆசிரியரே இரண்டாவது பெற்றோராக அந்த மாணவருடன் வாழ வேண்டியதாகி விடுகிறது. கல்வி என்பது பாடப் பொருளை மட்டும் கற்றுக் கொடுத்து தேர்வில் மதிப்பெண் பெற வைப்பதல்ல. வகுப்பறைக்குள் ஒரு மாணவன், தான் வாழும் சமூகத்தையும் அறிந்து கொள்கிறான். அதைக் கற்றுக் கொடுப்பது ஆசிரியரின் கடமையாகிறது.

வகுப்பறைக்குள் தான் சந்திக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய உலகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியது ஆசிரியர்களது அன்றாடப் பணிகளுள் முதன்மைப் பணியாகிறது. மாணவர்க்குப் பாடப்பொருளைத் திறம்படக் கற்பிப்பவராக மட்டுமின்றி பல பரிமாணங்களைப் பெற்றவராக ஆசிரியர் தன்னை வளர்த்துக் கொள்கிறார். மாணவர்களைச் சமூகத்திற்கு ஏற்ற மனிதராக வார்த்தெடுக்கும் பணிகளைச் செய்வதும் அவரது தலையாய கடமையாகிறது.

உளவியலாளர்...

மாணவரின் இயல்பை அறிந்து அரவணைத்து, கற்றலில் ஏற்படும் சிக்கலை உளவியல் ரீதியாக அணுகி அதைத் தீர்த்துவைத்து, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுவது ஆசிரியரின் பொறுப்பாகிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பவராக மட்டுமில்லாமல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்பவராகவும் மாறும்போது அனைத்தும் எளிதாகின்றது.

ஆசிரியர் - மாணவர் உறவு

ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியருக்குப் பாட அறிவை விட, குழந்தை உளவியல் கூடுதலாகத் தேவைப்படுகிறது. ஒரு வளரிளம் பருவ மாணவியிடம் உனக்கு ஏன் இந்த ஆசிரியரை மிகவும் பிடிக்கிறது எனக் கேட்டால், அவர் மட்டுமே தோழி போல எங்களிடம் பழகுகிறார் என்பார். மேல்நிலை வகுப்பு மாணவரிடம் ஒரு குறிப்பிட்ட பாட வகுப்பை மட்டும் ஏன் நேசிக்கிறீர்கள் என்றால், அந்தப் பாடத்தின் ஆசிரியர் எங்கள் மீது எதிர்மறைச் சொற்களை வீசுவதில்லை. ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் என்கின்றனர். ஆக மாணவர் வளர வளர அவர்களது எதிர்பார்ப்புகள் ஆசிரியரிடம் நிறைவடைந்தால், ஆசிரியர் - மாணவர் உறவில் மிக நல்ல விளைவுகள் உருவாகின்றன. எந்த வித வகுப்பறையானாலும் அதன் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான அளவீடு ஆசிரியர் - மாணவர் உறவு எனலாம்.

ஆசிரியர்கள் வெறும் கோப்புகளுடன் பணிபுரியவில்லை, உயிருள்ள குழந்தைகளுடன் வாழ்கின்றனர். அவர்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களைக் களைதல், கற்றல் சூழலை இனிமையாக்குதல், மாணவர் மீது தனிக்கவனம் செலுத்துதல், மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துதல், தனித்திறன்களை வளர்த்தல், குடும்பச் சூழலை அறிந்து அணுகுதல், மகிழ்ச்சியான கற்பித்தலை வழங்குதல் இப்படி ஏராளமான குணங்களை ஒரு ஆசிரியர் தனக்குள்ளே வளர்த்துக் கொள்ள மாணவர்களே உற்ற கருவிகளாகின்றனர்.

ஒரு மனிதர் தன்னை ஆசிரியராக அடையாளப்படுத்திக் கொள்ள தனக்குள் வளர்த்துக் கொள்ளும் பண்புகளை மாணவர்களை மையமாக வைத்தே பெறுகின்றார். தன்னை நம்பி வரும் மாணவர்களை அறிவிலும் மற்ற எல்லாக் கோணங்களிலும் கூர்மைப்படுத்தும் பொருட்டு தன்னைத்தானே இழைத்துக் கொள்ளும் பண்பைப் பெறுகிறார் ஆசிரியர். ஒரு வகுப்பறையில் இரு கை ஓசைகளாகவே ஆசிரியர்- மாணவர் இருவரும் வாழ்கின்றனர். மாணவர்க்காக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்வதும் ஆசிரியர் வழிகாட்டுதல்படி தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் மாணவரும் அமைந்து விடும்போது அதன் விளைவுகள் சொல்லில் அடங்கா நன்மையைத் தருகின்றன .

அதே போல மாணவர் நிலையில் தன்னை உணர்ந்து செயல்படும் ஆசிரியர்கள் மாணவர் மனதில் வெற்றி பெற்றவர்களாகி விடுகின்றனர். ஆசிரியர் - மாணவர் உறவின் இடைவெளி குறையக் குறைய இருவரது வெற்றிகளும் மகிழ்ச்சியும் அதிகமாவது கண்கூடாகத் தெரியும். கல்வி ஆசிரியரிடம் இருந்து அல்ல; மாணவரிடமிருந்தே தொடங்குகிறது என்கிறார் மாண்டிசோரி. ஆசிரியரும் மாணவரும் இந்தக் கட்டமைப்பிற்குள் தங்களைப் பொருத்திக் கொள்ளும்போதுதான் அதற்குப் பொருள் உண்டாகிறது. ஆசிரியர்- மாணவர் உறவை மேற்கூறிய வழிவகைகளில் செழுமைப்படுத்தினாலே ஆசிரியர்கள் பெற்றோர் தரப்பிலும் சமூகத்திலும் போற்றத் தகுந்தவர்களாக மதிக்கப்படுவர்.

ஆசிரியர்களின் பணி

ஆசிரியர்கள் காலத்திற்கேற்றபடி தொழில் முறையில் முன்னேற்றிக் கொள்பவராகவும் அவற்றை வகுப்பறையில் செயல்படுத்துபவராகவும் நிலைநிறுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதே போல மாணவர்களுக்கு வாய்ப்புகளைப் பரவலாக்கி சம வாய்ப்புள்ள சூழலையும் உருவாக்குவது அவரது கடமை. பாடப்பொருள் சார்ந்தும் வாழ்வியல் திறன் சார்ந்தும் அவர்களை வார்த்தெடுக்கும் பொறுப்பும் ஆசிரியர்க்கே உரியதாகிறது.

ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்பதன் பொருள் உணர்வதும் அவசியமாகிறது. ஆசிரியர் தன்னிடம் கல்வி கற்க வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் முழுப் பொறுப்பாகி விடுகிறார். அவர்களை வாழ்வில் வெற்றி பெற வைக்கத் தேவையான பொறுப்புகள் அனைத்தும் ஆசிரியர்க்குரியதாகி விடுகிறது. பள்ளிக்குள்ளும், வீட்டிற்குள்ளும், சமூகத்திற்குள்ளும் மாணவரை வளர்த்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் விரும்பியோ விரும்பாமலோ ஆசிரியர்க்கே வந்தடைகிறது. ஆகவேதான் ஆசிரியருக்கு, தனது விருப்பு, வெறுப்பு, பொழுதுபோக்கு என மற்றெல்லாவற்றையும் புறந்தள்ளி மாணவரை மையப்படுத்தி பணியாற்றும் அர்ப்பணிப்பு அவசியமாகிறது.

- அரசுப் பள்ளி ஆசிரியர் உமாமகேஸ்வரி,
மாநில ஒருங்கிணைப்பாளர் -அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்