மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை மறைவு; வைர மணித் தூண் சாய்ந்தது: வைகோ வேதனை

By செய்திப்பிரிவு

மதிமுக வரலாற்றில் அழியாத புகழ்மணியாய், ஒளி விளக்காய் என்றும் அண்ணன் நாசரேத் துரை நிலைத்து இருப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85.

நாசரேத் துரை மறைவு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

''பேரிடி தலையில் விழுந்துவிட்டது. மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர், என் உயிரினும் மேலான பாசச் சகோதரர் நாசரேத் துரை இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் வேதனையில் துடிதுடித்துப் போனேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணன் நாசரேத் துரைராஜ்.

சின்னஞ்சிறு பருவத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக நாசரேத் பகுதியில் அண்ணாவின் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர். நாசரேத் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். நாசரேத் நகர வங்கித் தலைவராக இருந்தவர். தென்னிந்திய திருச்சபையில் திருநெல்வேலி, தூத்துக்குடி டயோசிசனில் சிறப்பு உறுப்பினராக 11 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கரோனா முடக்கத்திற்கு முன்பு அவரது இல்லத்திற்குச் சென்று, அண்ணன் நாசரேத் துரையைச் சந்தித்து, நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தேன். அவரது சகோதரியும், அவரது மூன்று புதல்வியரும் அமெரிக்காவில் இருக்கின்றார்கள். 1984இல் நான் முதன்முதலாக அமெரிக்கா சென்றபோது, இருபதுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட மாளிகை போன்ற அவரது அக்கா வீட்டில்தான் தங்கினேன். அந்த வீட்டிற்கு டாக்டர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சென்று இருக்கின்றனர். ஐயா தினகரன் கே.பி.கே. பல நாள் அந்த வீட்டில் தங்கி இருந்தார்.

அந்தக் குடும்பத்தினர் பொழிகின்ற பாசத்தைச் சொற்களால் வர்ணிக்க முடியாது. அவ்வளவு அன்பான குடும்பம். அண்ணன் நாசரேத் துரையின் துணைவியாரும், அவரைப் போலவே அன்பும் பரிவும் காட்டுவார்.

நியூயார்க் நகரின் ஐ.நா.மன்றக் கட்டடத்தின் எதிரே பறக்கின்ற பன்னாட்டுக் கொடிகளைப் பார்த்துவிட்டு, தமிழனுக்கென்று ஒரு கொடி இங்கே பறக்கவில்லையே? என்று தன் ஏக்கத்தைச் சொல்வார்.

1993 ஆம் ஆண்டில் இருந்து எனக்கு உடன்பிறவாத அண்ணனாகவே இருந்தார். தனக்கென்று எதையும் நாட மாட்டார். சிறிது காலமாக உடல்நலம் இல்லாததால், அவரால் அதிகம் பயணம் செய்ய முடியவில்லை. நான் நெல்லை, தூத்துக்குடி செல்லும்போதெல்லாம் நாசரேத்துக்குச் சென்று அவரோடு உரையாடி மகிழ்ந்து வருவேன். இனி எங்கு பார்க்கப் போகிறேன் அவரின் திருமுகத்தை; இனி என்று பேசப் போகிறேன் அவரோடு. எல்லாம் போய் விட்டதே!

கடந்த 27 ஆண்டுகளில் என்னுடைய கருத்துக்கு மாறாக ஒரு கருத்தையும் அவர் என்னிடம் பேசியது இல்லையே! அப்படியே ஏற்றுக்கொண்டு எனக்குக் காவல் அரணாக, விழி காக்கும் இமையாக, உயிருக்கு உயிராக அன்றோ நேசத்தைக் கொட்டினார்.
அவருடைய அன்னையார் உயிரோடு இருந்த காலங்களில் அவரது வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் எனக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.

மிடுக்கான தோற்றம், அன்பைப் பொழியும் கண்கள், எல்லோரையும் அரவணைக்கும் பாங்கு கொண்ட, நாசரேத் வட்டாரத்தில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட அந்த வைர மணிவிளக்கு அணைந்துவிட்டதே! உரம் மிக்க கொள்கைத் தூண் சாய்ந்துவிட்டதே! கழகக் கண்மணிகளுக்கு எதைச் சொல்லித் தேற்றுவேன்?

மதிமுக வரலாற்றில் அழியாத புகழ்மணியாய், ஒளி விளக்காய் என்றும் அண்ணன் நாசரேத் துரை நிலைத்து இருப்பார்.
உடைந்து சுக்கல் சுக்கலாகிப் போன உள்ளத்தோடு, அவரது துணைவியாருக்கும், புதல்வியருக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகளை இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்