ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி, நேற்று காலை நகர அரசுப் பேருந்து (தடம் எண்-42) சென்றுகொண்டு இருந்தது. லக்காபுரம் அருகே பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்தின் அடியில் சிக்கிய நிலையில் 20 அடி தூரம் வரை அவர்களை இழுத்துச் சென்ற பேருந்து, சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.
மொடக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்தை அப்புறப்படுத்தியபோது, பேருந்தின் அடிப்பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டனர். மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், பேருந்தில் பயணித்து காயமடைந்த பயணிகளை முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் மொடக்குறிச்சி அருகே ஆளூத்துப்பாளையம், பரமசிவபுரத்தைச் சேர்ந்த சேர்ந்த மோகம்புரி (60) அவரது மனைவி மரகதம் (58), மாமியார் பாவையம்மாள் (80), மரகதம் சகோதரர் பாலசுப்பிரமணி (55) ஆகியோர் உயிரிழந்தனர். ஈரோட்டில் நடந்த ஒரு திருமணத்துக்கு சென்று விட்டு திரும்பியபோது, இந்த விபத்து நடந்துள்ளது. அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கவனக்குறைவாக பேருந்தை ஓட்டியதாக பேருந்து ஓட்டுநர் மெரிக் பிரபு (45) மீது மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரோனா பாதிப்பால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் நடந்த இந்த பேருந்து விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முழுமையான பரிசோதனை
பேருந்து விபத்துகளைத் தவிர்க்க, 5 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளை, முழுமையான பரிசோதனை செய்த பின்பே இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு ஈரோடு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது:
கடந்த மார்ச் மாதம் முதல் அரசுப் பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இடையில் 25 நாட்கள் மட்டுமே தளர்வின்போது இயக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் முழுமையான தளர்வு அளிக்கப்பட்டு, 7-ம் தேதி முதல் 100 சதவீத பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
பேருந்துகளை வழித்தடத்தில் இயக்குவதற்கு முன்பாக, முழுமையான பராமரிப்புப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதன்பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும். அது பயணிகளுக்கும், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
பொதுவாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகள் பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலையில், தற்போது 5 மாதத்துக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை, முழுமையான பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்க வேண்டும். இதில் அரசு மெத்தனம் காட்டக்கூடாது.
நீண்டகாலம் ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த வாகனத்தின் டயர் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால், டயர்களை பரிசோதித்து, மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். பேருந்துகளுக்கு முழு பராமரிப்பு மேற்கொள்ள கூடுதல் நிதி தேவையெனில், அதனை ஒதுக்கவும் அரசு தயங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago