ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப்.3) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு மாறாக, மன அழுத்தத்தையும், தற்கொலை எண்ணத்தையும் வளர்த்து வருகின்றன என்பதை கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்வுகள் உறுதி செய்துள்ளன. சுகமாக இருக்க வேண்டிய கல்வியைச் சுமையாக மாற்றி வரும் ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு இத்தகைய வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்கள் ஒரு வழி உரையாடல் என்பதாலும், அதை பின்பற்றுவதற்குக் கட்டாயமில்லை என்பதாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் விவகாரத்தில் இதுவரை எதிர்மறைத் தாக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையினரால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்வது என்பது பொருளாதாரம் சார்ந்தும், புரிதல் சார்ந்தும் பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது.
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு குறைந்தபட்சம் தரமான செல்பேசியில் தொடங்கி அதிகபட்சம் மடிக்கணினி வரை தேவைப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் இத்தகைய கருவிகள் தேவை.
தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க கடன் வாங்கி கட்டணம் செலுத்தும் ஏழை பெற்றோரால் புதிய செல்பேசியோ, மடிக்கணினியோ வாங்கித் தர முடியாத நிலையில், அவர்களால் எப்படி கல்வி கற்க முடியும்? ஆன்லைன் கல்வி முறை கல்வி வழங்குவதற்குப் பதிலாக மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது.
கல்வி வழங்கப்படுவதன் நோக்கமே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், அந்தக் கல்வியைக் கற்பிப்பதற்கான முறையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றால், அந்த முறையை குப்பையில் வீசி எறிவது தான் சமூக நீதியாகவும், சம நீதியாகவும் இருக்கும்.
இவற்றையெல்லாம் கடந்து ஆன்லைன் வகுப்புகள் முறையான கற்பித்தல் முறையே அல்ல. வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படும் போது, மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற முடியும். ஆன்லைன் வகுப்புகளில் பெரும்பாலான நேரங்களில் மாணவர்கள் ஐயம் கேட்க ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை.
சில ஆசிரியர்கள் யூடியூப் இணையத்தில் உள்ள கற்பித்தல் காணொலிகளை ஒளிபரப்பி அத்துடன் தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றனர். இத்தகைய ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதும் ஒன்றுதான்... நடத்தப்படாமல் இருப்பதும் ஒன்றுதான்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான வசதிகள் இல்லாததாலும், பாடங்கள் புரியாததாலும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேற்கு நன்னாவரத்தில் ஒரே செல்பேசியை ஆன்லைன் வகுப்புகளுக்காக 3 சகோதரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக நித்யஸ்ரீ என்ற மாணவி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆண்டிப்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்கிரபாண்டி என்ற 11-ம் வகுப்பு மாணவர், தமக்கு ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று தமது தந்தையிடம் கூறியுள்ளார். அதை ஏற்காத தந்தை திட்டியதால் விக்கிரபாண்டி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் விக்னேஷிடம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்பேசி இல்லாததற்காக பள்ளி நிர்வாகம் திட்டியதால் அந்த மாணவன் சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் 10-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ரித்திகா என ஆன்லைன் வகுப்புகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஆன்லைன் வகுப்புகள் ஒருபுறம் என்றால், ஆன்லைன் வழியில் அளிக்கப்படும் அளவுக்கு அதிகமான வீட்டுப்பாடங்கள் மாணவர்களின் விளையாடும் உரிமையைப் பறிக்கின்றன. மொத்தத்தில் ஆன்லைன் வகுப்புகள் கல்வி என்ற நிலையைத் தாண்டி பெரும் தொல்லையாகவும், கொடுமையாகவும் மாறியுள்ளன.
இவற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை உரியவர்கள் செவி மடுக்கத் தவறியதன் விளைவாகத் தான் இத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மேல், குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும் கூட, எல்.கே.ஜி. வகுப்புகளுக்குக் கூட 4 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும்; வசூலித்த கட்டணத்திற்குக் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே கட்டாயமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் மருத்துவரீதியாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.
ஆன்லைன் வகுப்புகளின்போது செல்பேசியை குழந்தைகள் உற்று நோக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் கண்களைப் பாதிக்கும். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக குழந்தைகள் மீது ஆன்லைன் வகுப்புகளைத் திணிப்பது முட்டாள்தனமானது; மனித உரிமை மீறல் ஆகும்.
ஆன்லைன் வகுப்புகள் எனப்படுபவை தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடு; அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பது பிற்போக்குத்தனம் இல்லையா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
கல்வியில் ஏற்றத்தாழ்வுகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் எந்த முறையும் தேவையற்றது தான். தவிர்க்க முடியாதபட்சத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கலாம். மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
அதற்குப் பதிலாக பாடத்திட்டக் குறைப்பு தொடர்பாக வல்லுநர் குழு கடந்த ஜூன் 10 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து பாடத்திட்டத்தை நடப்பாண்டுக்கு மட்டும் 50% வரை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதைக் கவனத்தில் கொண்டு, மாணவர்களை பாதிக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிப்பார் என நம்புகிறேன்"
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago