புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் மாநிலத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை மாநிலத் தலைவராக இருந்தவர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன். பல் வலியால் பாதிக்கப்பட்டு வலியால் பல்லை எடுத்த அவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு காலாபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (செப்.3) அதிகாலை எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் மரணமடைந்தார். இவர் 1985-90 இல் உருளையன்பேட்டை தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தார்.
2001-2006 மற்றும் 2006-2011 இல் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக எம்எல்ஏவாக பதவி வகித்தார். 2012-2014 வரை புதுவை மாநில திமுக அமைப்பாளராக பதவி வகித்தார்.
அதைத்தொடர்ந்து பாஜகவில் இணைந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
புதுவையில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ பாலன் ஆகியோர் கரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் தற்போது எம்.ஏ.எஸ். சுப்ரமணியனும் மரணடைந்துள்ளார்.
இவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "களத்தில் முன்னிற்கும் என் அன்புக்குரிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான எம்.ஏ.எஸ். சுப்ரமணியனின் மறைவு நமக்கும் பேரிழப்பு. நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கட்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார்.