மாணவி தற்கொலை: பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்துக; ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப்.2) வெளியிட்ட அறிக்கை:

"நேற்றைய தினம் கிடைத்த செய்திகளில் ஒன்று நெஞ்சை மிகவும் கனக்கச் செய்கிறது. ஆன்ட்ராய்டு செல்போன் மூலமாக ஆன்லைன் பாடம் படிப்பதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் அந்தச் செய்தி.

உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டுநன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்துக்கு மூன்று மகள்கள். நித்தியஶ்ரீ கல்லூரியில் படிக்கிறார். மற்ற இருவரும் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் படித்து வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் அதன் பயன்பாட்டுக்காக மூவரும் தமது தந்தையிடம் செல்போன் கேட்டுள்ளார்கள். மூன்று செல்போன்கள் வாங்கித்தரும் வசதி அவருக்கு இல்லாததால், மூவருக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்போன் வாங்கித் தந்துள்ளார். ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்புகள் வந்தால் யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஆறுமுகத்தின் மூத்த மகள் நித்தியஶ்ரீ தற்கொலை செய்து கொண்டிருப்பதைச் சாதாரண மரணங்களில் ஒன்றாகக் கடந்து செல்ல முடியாது.

அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள் என்பதை நித்தியஶ்ரீயின் மரணம் எடுத்துக்காட்டுகிறது. ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை மாற்றாகச் சொன்னது அரசு. பள்ளிகளுக்கு மாற்றாக எப்போதும் ஆன்லைன் வகுப்புகள் மாற முடியாது என்பதைத் தொழில்நுட்ப வசதிக்காக மட்டுமே விமர்சிக்கவில்லை. பள்ளிகள் நேரடியாக வழங்கும் பொதுப்பயன்பாட்டை ஆன்லைன் வகுப்புகளால் வழங்க முடியாது என்பதற்காகவும் கல்வியாளர்கள் விமர்சித்து வந்தார்கள்.

அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் என்று சொல்வதற்கு முன்னால், அனைவருக்கும் அத்தகைய வழிமுறையைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறதா, தேவைப்படும் பொருளாதாரப் பின்புலம் உள்ளதா என்பதை அரசு ஆழ்ந்து சிந்தித்ததாகத் தெரியவில்லை.

அனைவருக்கும் செல்போன் இருக்கிறதா, அதுவும் ஆன்ட்ராய்டு செல்போனாக இருக்கிறதா, ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் என்றால் மூவருக்கும் தனித்தனியாக இருக்கிறதா, இணைய வசதி இருக்கிறதா, அந்த வசதி தடையற்றதாக இருக்கிறதா, அந்த இணையத்துக்கு மாதம் தோறும் செலவு செய்யும் வசதி இருக்கிறதா, இவை எது குறித்தும் கவலைப்படாமல் 'நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்' என்று அறிவித்ததால் ஏற்பட்ட துயரம்தான் நித்தியஶ்ரீயின் மரணம்.

இதைப்போல் இன்னும் எத்தனை நித்தியஶ்ரீகள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை.

இதற்கிடையில், ஆலங்குடியை அடுத்த கபளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா, தனக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்புக் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் நேற்று வெளியாகி உள்ளது. அதனால்தான் நீட் தேர்வைப் பலிபீடம் என்கிறோம்.

கல்வி என்பது ஏதோ பட்டம் பதவிகளுக்காக அல்ல; அது அனைவரையும் அனைத்துக்குமாகத் தகுதிப்படுத்தி அதிகாரப்படுத்தும் பொருத்தமான கல்வியாக இருக்க வேண்டும். அத்தகைய தகுதிப்படுத்துதல் கூட, அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சமவாய்ப்பை வழங்காத எந்தக் கல்வியும், ஏற்றத்தாழ்வையும் விரக்தியையுமே விதைக்கும். அனிதாக்களையும் நித்தியஶ்ரீக்களையும் உயிரைப் பறிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இதைச் சொல்வதால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்ப்பதாகப் பொருள் கொள்ள வேண்டாம். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள் என்றே சொல்கிறேன். அதை நோக்கிய நகர்வை அரசு தாமதமின்றி முன்னெடுத்திட வேண்டும்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்