ஓசூரில் பேருந்துகள் இயக்கம் தொடக்கம்: எல்லையில் காத்திருக்கும் இரு மாநில அரசுப் பேருந்துகள்

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் பேருந்து நிலையத்தில் மாவட்டத்துக்குள்ளாக 50 சதவீத அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கி உள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில், தங்களுடைய மாநிலத்துக்குள் வரும் பயணிகளை அழைத்துச் செல்ல தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லையிலும் இரு மாநில அரசுப் பேருந்துகளும் வரிசையில் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் கட்டமாகக் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு ஓசூர் பேருந்து நிலையம் மூடப்பட்டது. அதன் பிறகு அரசால் பிரிக்கப்பட்ட மண்டலங்களுக்கு இடையே மட்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்பு அதில் மாற்றம் செய்யப்பட்டு சில நாட்கள் மாவட்டத்துக்குள் மட்டும் அரசுப் பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி அரசுப் பேருந்துகளின் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பேருந்து நிலையம் மூடப்பட்டது. இதனிடையே ஓசூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையக் கட்டிடத்துக்கு வண்ணம் தீட்டி, செப்பனிடும் பணிகளும் வேகமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இரண்டு மாதங்களைக் கடந்த நிலையில் தற்போது கரோனா ஊரடங்கில் மேலும் தளர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் என்ற அரசு உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, ஓசூரில் இன்று முதல் மாவட்டத்துக்குள் மட்டும் அரசுப் பேருந்துகள் ஓடத்தொடங்கி உள்ளன. முதல் நாளில் பயணிகள் கூட்டம் இன்றி பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் 10 அல்லது 15 பயணிகளே பயணம் செய்தனர். மாவட்டத்துக்குள் மட்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகளின் கூட்டம் இன்றி, பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள், தமிழக எல்லையான ஜுஜுவாடி வரை இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்மாநில அரசுப் பேருந்துகளில் பயணித்தனர். அதேபோல கர்நாடக அத்திப்பள்ளியில் இறக்கி விடப்பட்டு தமிழகத்துக்குள் வரும் பயணிகள், அங்கிருந்து நடந்து வந்து ஜுஜுவாடி சோதனைச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து ஓசூர் வருகின்றனர்.

ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்ல, கர்நாடக எல்லை அத்திப்பள்ளியில் காத்திருக்கும் கர்நாடக அரசுப் பேருந்துகள்.

இதுகுறித்து ஓசூர் பேருந்து நிலைய நேரக் காப்பாளர் கூறும்போது, ''ஓசூர் பேருந்து நிலையத்தில் மாவட்டத்துக்குள் 50 சதவீத அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ளது. ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், தளி, சூளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒரு வழித்தடத்தில் ஒரு பேருந்து என 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கூட்டத்தைப் பொறுத்துப் படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தமிழகம்- கர்நாடகா இடையே அரசுப் பேருந்துகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓசூரிலிருந்து ஜுஜுவாடி வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுப் போக்குவரத்தில் தளர்வு செய்யப்பட்ட முதல் நாள் என்பதால் பயணிகளின் வரவு எதிர்பார்த்ததை விடக் குறைவாக உள்ளது. முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஓட்டுநர் மற்றும் நடத்துநரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE