அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் வகையில் இருக்கக்கூடாது; தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

By டி.ஜி.ரகுபதி

அமைச்சர்களின் பேச்சு, கூட்டணியை முறிக்கும் வகையில் இருக்கக்கூடாது என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று கோவையில் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று (செப்.1) வந்தார். மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தமிழக தலைவர்களுக்கு பாஜக தொடர்ந்து மரியாதை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சுதந்திரப் போராட்ட தியாகி பூலித்தேவனுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு, அவர்களின் தியாகங்களைப் போற்றும் விதமாக பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு வேதனைக்குரியதாகும். அவரது பொருளாதாரச் சிந்தனைகள் நாட்டுக்கு மிகவும் பயன் அளித்தன. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அவர் ஒப்புதல் அளித்தார்.

பாஜக சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் மூலம் 'பூத்'களைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. எங்களது ஒவ்வொரு மாநில நிர்வாகியும், ஒவ்வொரு மக்களவைத் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இன்று பாஜகவை நோக்கி பலதரப்பட்ட மக்கள் வருகின்றனர். பிரதமரின் கரத்தை வலுப்படுத்த அவர்கள் வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மாற்றுக் கட்சிகளில் இருந்து, குறிப்பாக, திராவிடக் கட்சிகளில் இருந்து பல முன்னணித் தலைவர்கள் எங்களது கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இளைஞர்களின் மத்தியில் மிகப் பெரிய உத்வேகத்தை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் மற்ற மாநிலங்களை விட, தமிழகம்தான் மத்திய அரசின் திட்டங்களில் அதிகம் பலன் அடைந்துள்ளது. வருங்காலம் பாஜகவின் காலமாக இருக்கும்.

எங்களது நோக்கம் தமிழக சட்டப்பேரவையில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டு இருப்பதுதான். சட்டப்பேரவைத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு, அதற்கான முழுப் பணிகளைச் செய்து வருகிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. கூட்டணி எப்படி இருந்ததோ அதேபோல் தான் தற்போதும் உள்ளது. தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. நாங்கள் செய்த ஆய்வில், பாஜக தனித்து நின்றாலே, 60 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. எங்களது பணி வேகமாக இருக்கும். கூட்டணியில் பாஜக உள்ளது என அதிமுகவினரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

சசிகலாவின் சொத்து முடக்கப்பட்டதற்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை. சட்ட ரீதியாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்கள் மீது வழக்குப் போட்டால் நாங்கள் எதிர்கொள்வோம். தான் கூறிய கருத்துக்கு ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார். அதேபோல், தமிழக அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிப்பதாக இருக்கக்கூடாது. அனுகூலமான வகையில் இருக்க வேண்டும். ரஜினி கட்சி தொடங்கினால் வரவேற்போம். நாங்கள் பாஜகவின் பலம் மிக்க பகுதியாகக் கருதுவது கொங்கு மண்டலப் பகுதியைத்தான்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிறையப் பேர் இன்னும் பாஜகவில் இணைய உள்ளனர். டிசம்பர், ஜனவரி மாதங்ககளில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்".

இவ்வாறு முருகன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE