சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மதுரைக் கிளை வழக்கறிஞர்களுக்கு உரிய பிரநிதித்துவம் வேண்டும்: தலைமை நீதிபதிக்கு பார் அசோசியேஷன் கடிதம் 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பார் அசோசியேஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் தகுதியுடையவர்களை நியமனம் செய்வது வழக்கம். சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதி மற்றும் 53 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ல் செந்தில்குமார் ராமசாமி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு புதிய நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லை. தற்போது 21 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் புதிய நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்களாக பணிபுரிபவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பார் அசோசியேஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பார் அசோசியேஷன் பொதுச் செயலர் என்.இளங்கோ, தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மதுரை உட்பட 14 மாவட்டங்களின் வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்டு 16 ஆண்டாகிறது.

என்.இளங்கோ

உயர் நீதிமன்ற கிளையில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் சட்ட அறிவில் மேம்பட்டவர்கள். உயர் நீதிமன்ற நீதிபதியாகும் தகுதியுடைய பல வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற கிளையில் பணிபுரிகின்றனர்.

கடந்த 16 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற கிளையிலிருந்து 6 பேர் மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். எனவே நீதிபதிகள் நியமனத்தின் போது உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE