குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வைகோ, முத்தரசன், கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல்:
“இந்தியக் குடி அரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர். பிரதமர் இந்திரா காந்தியின் நன்மதிப்பைப் பெற்றவர். அவரால் அரசியலில் அறிமுகம் பெற்றார். 1969 ஆம் ஆண்டு, மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். 1973 ஆம் ஆண்டு, தொழில்வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஆனார்.
1975, 81, 93, 99 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு, மாநிலங்கள் அவை முன்னவர் ஆனார். 1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்திரா அம்மையார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காலத்தில், அவரது நம்பிக்கைக்கு உரிய மூத்த அமைச்சராகத் திகழ்ந்தார். 1982 முதல் 1984 வரை நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தார்.
கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்திற்கு, மிகவும் நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, தாகூர் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டு இருந்தார். அதனால், இவரும் இலக்கியவாதி ஆனார். சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார். மேற்கு வங்க மண்ணின் மைந்தராக, வங்க மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார்.
1970-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் அவர் பங்கேற்று உரை ஆற்றியதைக் கேட்டேன். பேரறிஞர் அண்ணா மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர். கலைஞருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டு இருந்தார்.
1978 ஆம் ஆண்டு, நான் முதன்முறை மாநிலங்கள் அவை உறுப்பினர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், அதே அவையில் அவர் மூத்த உறுப்பினர். எனவே, நாள்தோறும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று இருந்தேன். விவாதங்களில் பங்கேற்று உரை ஆற்றுகின்றபோது, பலமுறை பாராட்டி இருக்கின்றார்.
1981 ஆம் ஆண்டு, மாருதி கார் நிறுவனம் தொடர்பான விவாதத்தில் நான் பேசிய உரையை, பிரதமர் இந்திரா அம்மையார் பாராட்டியதாக, ஒரு துண்டுச்சீட்டில் எனக்கு எழுதி அனுப்பினார். என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும் மறுக்காமல் உடனே வரச் சொல்லுவார்.
பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு, நாட்டுக்கு ஒரு இழப்பு. அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
இவ்வாறு வைகோ இரங்கலில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் :
நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரிய பின்னணி கொண்ட பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு ஓய்வு பெற்ற பிறகு உடல் நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 1969 இல் காங்கிரஸ் பிளவுபட்ட போது, இந்திராவிற்கு உற்ற துணையாக அரசியல் பிரவேசம் செய்தவர்.
மத்திய அரசில் அவர் வகிக்காத பதவிகளே இல்லையென்று கூறுகிற வகையில் பாதுகாப்பு அமைச்சராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, வர்த்தக அமைச்சராக, நிதி அமைச்சராக மற்றும் திட்டக்குழு தலைவராக பொறுப்பு வகித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
சோனியா காந்தியை 1998 இல் காங்கிரஸ் தலைமையை ஏற்க வலியுறுத்தியவர்களில் முதன்மையானவர் பிரணாப் முகர்ஜி. 2004-ல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஆட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலிருந்து பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பெரும் துணையாக இருந்தவர். ஆட்சித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் எழுகிற போது அதைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவில் முதன்மை பங்கு வகித்தவர்.
மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2012 இல் குடியரசு தலைவராக தேர்வு பெற்றவர் பிரணாப் முகர்ஜி. 50 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கையில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கின்ற வகையில் நமது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கே மிகப் பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல்:
“நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பணியாற்றியவரும், நாடறிந்த அரசியல் ஆளுமைகளில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி (84) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
மேற்கு வங்க மாநிலம் மிரதியில் 1935 டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த நிலையில், இந்திரா காந்தியால் பொது வாழ்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நுழைந்த பிரணாப் முகர்ஜி, பின்னர் மக்களவை உறுப்பினராகவும் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர். மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு, அயலுறவு, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். நாடாளுமன்ற அவை முன்னவராக மாற்றாரும் போற்றும் வகையில் செயல்பட்டவர்.
கடந்த 2004 - 2009 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றியவர். நவ தாராளமயக் கொள்கை ஆதரவர்களுக்கும், 61 உறுப்பினர்களோடு இருந்த இடதுசாரி கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் காண “குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை” வரைவு செய்து, கருத்திணக்கம் கண்டதில் வெற்றி கண்டவர்.
நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது பெற்றவர். பல்வேறு நாடுகளின் சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது நீண்ட பொது வாழ்வில் பெற்ற அனுபவத்தை பல நூல்களாக படைத்துள்ளார். உரை ஆற்றுவதிலும், வாதம் புரிவதிலும் தனித்திறன் பெற்றவர். இவரது மறைவு மிகவும் துயரமானது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அஞ்சலி செலுத்துவதுடன், அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago