கடந்த 70 ஆண்டுகளில் பதிவான சிலைக் கடத்தல் வழக்குகளை மறு விசாரணை செய்க: 'தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்' விஜய்குமார் கோரிக்கை

By குள.சண்முகசுந்தரம்

சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான 41 ஆவணங்கள் மாயமானது குறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இதற்கிடையில், வழக்கின் ஆவணங்கள் காணாமல் போவதும் கடத்தலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கு விசாரணையை முடித்து வைப்பதும் தமிழகக் காவல் துறையில் காலங்கலமாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே, 1950-ல் இருந்து தமிழகக் காவல் நிலையங்கள் அனைத்திலும் பதிவான சிலைக் கடத்தல், மற்றும் சிலைகள் மாயம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் மறு விசாரணைக்கு எடுக்கும் வகையில் அதுகுறித்த விவரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட் (The India Pride Project)’ அமைப்பின் இணை நிறுவனர் எஸ்.விஜய்குமார்.

சென்னையைச் சேர்ந்த விஜய்குமார் சிங்கப்பூரில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்தியாவிலிருந்து நமது பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் விலைமதிப்பற்ற சாமி சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளில் துப்புத் துலங்கவும் சிலைகள் உள்ளிட்ட நமது நாட்டின் புராதனச் சின்னங்களை வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருந்து மீட்டு வருவதற்கும் உலகெங்கும் உள்ள இவரது ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட் ’ அமைப்பினர் உதவிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்துக்குச் சொந்தமான சாமி சிலைகளும் வெளிநாடுகளில் இருந்து மீட்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயிருக்கும் விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய விஜய்குமார், ''சிலைக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தகவலறியும் உரிமைச் சட்டத்தில் இந்தத் தகவல் தரப்பட்டிருக்கிறது. ஆக, இது இப்போது நடந்த சமாச்சாரம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம், இதுபோன்ற ஆவணங்கள் காணாமல் போவதும் சிலைக் கடத்தல் வழக்குகளை துப்புக் கிடைக்கவில்லை என்று சொல்லி மூட்டை கட்டி விடுவதும் ஐம்பது வருடங்களுக்கும் மேலாகவே வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும்போது வழக்கு விசாரணையில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த வழக்குகளை முடித்துவைக்க வேண்டும் என்பதில் எந்த வரையறையும் இல்லாமல் இருக்கிறது. ஆனால், சிலைக் கடத்தல் வழக்குகளை அதற்கென உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தாலும், வழக்குகள் குறித்த ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் இருக்க வேண்டும். எனவே, 1950-க்குப் பிறகு தமிழகத்தில் பதிவான சிலைக் கடத்தல் மற்றும் சிலைகள் மாயமான வழக்குகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்து, அவற்றில் இன்னமும் துப்புத் துலங்கப்படாத வழக்குகளை மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சிலைக் கடத்தல் வழக்கின் விசாரணையின்போது தமிழக இந்து அறநிலையத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் 1992 முதல் 2012 வரை தமிழகக் கோயில்களில் இருந்து சுமார் 1,300 சிலைகள் காணாமல் போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இதில் 830 சிலைகள் கற்சிலைகள்; மற்றவை ஐம்பொன் சிலைகள். இது 20 வருடத்துக்கான பட்டியல்தான். அதற்கு முந்தைய காலத்தில் காணாமல் போன கோயில் சிலைகள் குறித்த தரவுகள் இந்து அறநிலையத் துறையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்துக் காவல் நிலையங்களிலும் பதிவான சிலைத் திருட்டு வழக்கு விவகாரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் ஓரளவுக்குத் தகவல் திரட்ட முடியும்'' என்றார்.

தமிழக சிலைக் கடத்தல் வழக்கு விசாரணைகளின் தற்போதைய நிலவரம் குறித்து அவரிடம் கேட்டபோது, ''சிலைக் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்படியாக ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்கள். ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் மட்டும்தான் இன்னும் சிறையில் இருக்கிறார். இருப்பினும் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள அவரிடமிருந்து பெரிய அளவில் எதையும் நம்மால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், ஒருவேளை இங்கே அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியில் வந்தாலும் அமெரிக்காவின் ஹோம்லேண்ட் போலீஸ் அவரைக் கைது செய்து சிறையிலடைக்கத் தயாராய் இருக்கிறது.

கபூர் கைதுசெய்யப்பட்ட போது தமிழகத்துக்குச் சொந்தமான, சுத்தமல்லி கோயில் நடராஜர் சிலை மற்றும் அம்மன் சிலைகள் 2 இவற்றுடன் இன்னொரு நடராஜர் சிலை என மொத்தம் நான்கு ஐம்பொன் சிலைகளை நியூயார்க்கில் ஆர்ட் கேலரி நடத்திய தனது தோழி செலினாவின் பொறுப்பில் தனது மேலாளர் மூலம் ஒப்படைத்தார். ஆனால், வழக்கு விசாரணைக்குப் பயந்து அந்த சிலைகளை கபூரின் தங்கை சுஷ்மா சரீனிடம் ஒப்படைத்து விட்டார் செலினா.

இந்த விவகாரங்களை அறிந்த அமெரிக்கப் போலீஸ் சுஷ்மாவைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. அந்த வழக்கில் தற்போது பிணையில் இருக்கிறார் சுஷ்மா. ஒருவேளை கபூர் இங்கிருந்து விடுதலையானால் சுஷ்மாவிடம் இருக்கும் சிலைகளைத் தாமாக முன்வந்து ஒப்படைத்து நன்னடத்தை அடிப்படையிலும் தனது உடல்நிலையைக் காரணம் காட்டிக் கருணை அடிப்படையிலும் அமெரிக்க நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரவும் முயலலாம்.

திருமங்கை ஆழ்வார் சிலை

இதனிடையே, சிலைக் கடத்தல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு அதிகாரியாகக் கூடுதல் ஆணையர் அபய்குமார் சிங் தலைமையிலான போலீஸார் சிலைக் கடத்தல் வழக்குகளைச் சிரத்தையுடன் கையாண்டு வருகிறார்கள். கும்பகோணம் அருகிலுள்ள சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சிலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப் போய்விட்டது. இந்தச் சிலையானது தற்போது லண்டனில் உள்ள தனியார் அருங்காட்சியகம் வசம் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டு அதை மீட்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா காலமாக இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் சிலை இங்கே வந்திருக்கும்.

அதேபோல், தமிழகத்துக்குச் சொந்தமான மேலும் மூன்று ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் எடுத்து வருகிறார்கள். சீக்கிரமே அந்த சிலைகளும் தமிழகம் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்