அனைத்துக் கடன் வசூலையும் ஒத்தி வைப்பதுடன், கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.30) வெளியிட்ட அறிக்கை:
"தஞ்சாவூர் அருகே, வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு ஆனந்த் என்ற இளைஞர் நேற்று தீக்குளித்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
வெல்டரான ஆனந்த், வீடு கட்ட தனியார் வங்கியிடம் கடன் பெற்று அசலை விட அதிகமான தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனாலும் வங்கி அதிகாரிகள் மீதத் தொகையினை கட்டுமாறு மிரட்டியுள்ளனர். இந்நிலையில், ஆக.27 அன்று வங்கி அதிகாரிகள் ஆனந்த் வீட்டுக்கு நேரில் சென்று அங்கிருந்த அவரது மனைவி ஹேமாவிடம் வட்டியுடன் முழுத் தொகையும் செலுத்தாவிட்டால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
கடன் தவணையைக் கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டும் வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டதால், வங்கி வாசல் முன்பு ஆனந்த் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.
பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் கூட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கந்து வட்டிக் கொடுமை கொடி கட்டி பறக்கிறது. இக்கொடுமை தாங்காமல் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே புதுக்கோட்டை, திருநெல்வேலி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
கந்து வட்டிக் கொடுமையால் சிக்கித் தவிப்பவர்கள் தங்களது சொத்துக்கள், உடமைகள் ஆகியவற்றை இழந்து தவித்து வருவதோடு, வீட்டிலிருக்கும் பெண்கள், சிறுமிகள் என அனைவரையும் கந்துவட்டிக்காரர்கள் அடியாட்களை நியமித்துத் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் தங்கள் உயிரை குடும்பத்துடன் மாய்த்துக் கொள்ளும் அவலம் ஏற்படுகிறது.
2003-ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இயற்றப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் அமலாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற உயிரிழப்புச் சம்பவங்களும், தற்கொலை சம்பவங்களும் நடைபெறுகின்றன என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அதேபோல, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஏழை, எளிய மக்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி சிக்கித் தவித்து வருகின்றனர். கரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிக்கும் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத காரணத்தினால் நுண்நிதி நிறுவனங்கள் அடியாட்களை வைத்து மிரட்டி வட்டிக்கு மேல் வட்டி செலுத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கின்றனர்.
கரோனா காலத்தில் இ.எம்.ஐ., கடன்கள், நுண்நிதி கடன்கள், கிரெடிட் கார்ட் கடன்கள் போன்றவற்றை வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை காலில் போட்டு மிதித்துக் கொண்டு அடியாட்களை வைத்து மிரட்டி கடன் வசூலை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகளுக்குத் தூண்டப்படுகின்றனர்.
இதுபோன்ற கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்ணைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வரும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, ஆனந்தை தற்கொலைக்குத் தூண்டிய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிடுவதோடு அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும் இதுபோன்ற உயிரிழப்புகளும், துயரச் சம்பவங்களும் தமிழகத்தில் இனி நடைபெறாமலிருக்க தமிழக அரசு உடனடியாக கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும்.
கரோனா முடிந்து இயல்பு நிலை திரும்புகிற வரை நுண்நிதி கடன், சுயஉதவிக்குழு கடன், இ.எம்.ஐ., கிரெடிட் கார்ட் கடன் தவணை, வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் வசூலையும் ஒத்தி வைக்க வேண்டும்.
மேலும், இக்காலத்திற்கான வட்டித் தொகையினையும் ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago