குமரியில் ரயில்வே துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்த வசந்தகுமார்

By என்.சுவாமிநாதன்

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமாரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் குமரி மக்கள் வெற்றி பெற வைத்தனர். அவரது மறைவு குமரி மாவட்ட மக்களைக் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளது. அதனாலேயே குமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், குமரி மாவட்ட வழித்தடங்களை மதுரை கோட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் நீண்டகாலமாகக் கோரிக்கை இருந்தது. அதற்கு முயன்ற வசந்தகுமார், குமரி மாவட்டத்தில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் எட்வர்ட் ஜெனி, ''வசந்தகுமாரின் தொடர் முயற்சியால் நாகர்கோவில் - மும்பை , கன்னியாகுமரி- ஹவுரா ஆகிய ரயில்கள் எல்.எச்.பி ரயில் பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. மும்பை – நாகர்கோவில் ரயில் நாமக்கல் வழியாகக் கடந்த டிசம்பர் முதல் இயக்கப்பட்டு வருகின்றது. நாகர்கோவில் - தாம்பரம் அந்தோதையா ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுப் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னைக்குக் காலையிலேயே வேலைக்குச் செல்வோர் வசதியாகச் சென்று சேருமாறு பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புனலூர் - மதுரை பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி - மும்பை தினசரி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு நாகர்கோவிலிருந்து காலை 7 மணிக்குப் பதிலாக 8:50-க்குப் புறப்படுமாறு கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் கொல்லம் வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டப் பயணிகள் திருவனந்தபுரத்தில் இறங்கி அடுத்த ரயிலுக்குச் செல்லாமல் நேரடியாகக் கொல்லத்துக்குச் செல்ல முடியும். நாகர்கோவில் - கோவை பகல் நேர பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கால அட்டவணை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

குமரி மாவட்டப் பயணிகளுக்கு பயன்படாமல் கேரளா பயணிகளுக்காக இயக்கப்படும் கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலைத் திருவனந்தபுரத்துடன் நிறுத்த வேண்டும் எனத் துணிச்சலாகக் கோரிக்கை எழுப்பினார் வசந்தகுமார். இதேபோல் திருநெல்வேலி – ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில் வருடத்தில் ஆறுமாதம் அதாவது மழைக் காலங்களில் இனி இயங்காமல் திருவனந்தபுரம், கொச்சுவேலி சந்திப்புடன் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக அவர் கடுமையாக குரல் கொடுத்திருந்தார்.

இந்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது குமரி மாவட்டப் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் ரயில்களை மாற்றி இயக்க வேண்டும் என்பது கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கைக்காக வசந்தகுமார் அடுத்தகட்டப் போராட்டத்துக்குத் தயாராகி நாகர்கோவிலில் ரயில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ரயில்வே வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினார்.

கன்னியாகுமரியில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று விதி 377-ன் கீழ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இது மட்டுமில்லாமல் மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம், கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில்கள் எனப் பல்வேறு கோரிக்கைகள் பற்றியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இப்படிக் குமரி மாவட்ட ரயில்வே துறைக்கு வசந்தகுமார் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளார்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE