மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டு பாக்கியைக் கூட தர மறுத்து மத்திய அரசு கையை விரிக்கிறது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (ஆக.29) வெளியிட்ட அறிக்கை:
"மத்தியில் ஆளும் பாஜக பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மும்முரமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக நிறைவேற்றி வருகிறது!
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், அது ஏதோ மத்திய பட்டியலுக்கே மாறிவிட்டதைப்போல அகில இந்தியா முழுமைக்கும் ஒரே மருத்துவத் தேர்வு என்ற நீட் தேர்வு தொடங்கி, தேசிய கல்வி திட்டம் என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வித் திட்டம் போன்றவற்றுக்கு முன்னுரிமை தந்து நடத்தும் நிலை!
ஏழை, எளிய கிராம மக்களுக்கு எதிரான திட்டம்
மாநில கல்வித் துறைக்கே இனி வேலையில்லை என்று சொல்வதுபோல, மூன்று நுழைவுத் தேர்வுகள் பட்டப் படிப்புக்கு சேரும் நிலையில் என்ற ஏழை, எளிய கிராம மக்களுக்கு எதிரான திட்டத்தினை உருவாக்கி, அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் 'எங்களது எண்ணம் இக்கல்வித் திட்டம் மூலம் நிறைவேறுகிறது' என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தவர் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நிலையைக் கண் கூடாகக் காண்கிறோம்.
அதேபோல, மாநிலங்கள் தனியே இருக்கக்கூடாது, கூட்டாட்சித் தத்துவம் அதன் கொள்கைக்கு ஏற்புடைத்தது அல்ல; மாறாக, ஒற்றை ஆட்சி தான் இருக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக அறிவிக்காமலேயே பிடிவாதமாக செய்து வருகின்றனர்!
மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது!
மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரப் பறிப்பும்கூட, ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரிகள் இந்தியா முழுவதும் 2017 இல் அமல்படுத்தப்பட்டது; இதனால் மாநிலங்கள் தங்கள் சொந்தத் தேவைக்கு சுயேட்சையாக வரி விதிக்கும் உரிமை முழுமையாக மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது! கரோனா போன்ற பேரிடர் நிவாரணத்திற்குக்கூட மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே மாநில அரசுகள் நிதி திரட்ட முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை 2017 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடு செய்வதற்கான சட்டமும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், இப்போது மத்திய அரசு மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டு பாக்கியைக் கூட தர மறுத்து கையை விரிக்கிறது!
கடன் வாங்கும் யோசனை எப்படி பிரச்சினைக்கு சரியான தீர்வாகும்?
வெளிப்படையாகவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'வேண்டுமானால் மாநிலங்களுக்கு வர வேண்டிய 97 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டு (குறைந்த வட்டிக்கு) பிறகு திரும்ப வரிவசூல் அதிகரிக்கும்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிச் செலுத்தலாம்; அல்லது பற்றாக்குறையான 2.35 லட்சம் கோடி ரூபாயை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ளவேண்டும்' என்று கூறியிருப்பது எவ்வகையில் நியாயமாகும்? மாநில அரசுகளை அறவே திவாலாக்கி விடுகிற இந்தக் கடன் வாங்கும் யோசனை எப்படி பிரச்சினைக்கு சரியான தீர்வாகும்?
மத்திய அரசின் திறமையற்ற அணுகுமுறைக்கு மாநில அரசுகள் தண்டம் செலுத்த வேண்டுமா?
அதே 97 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசே ரிசர்வ் வங்கியிலிருந்து கடனாக வாங்கி, வட்டியுடன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்தும் வகையில் யோசனை செய்யக் கூடாதா?
கடவுள்மீது பாரத்தை பழியை மத்திய நிதியமைச்சர் போட்டுள்ளார்!
மாநில அரசுகள் கேட்பது உரிமை, பிச்சை அல்ல; கடவுள்மீது பாரத்தை, பழியை நிதியமைச்சர் போட்டுள்ளார்!
இதற்கு நாம் பதிலளிப்பதைவிட, அதே கட்சி, பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியசாமி கூறிய பதிலே போதுமானது; மத்திய அரசின் நிதி நிர்வாகம் எப்படி உள்ளது என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது!
கேட்கிறார் சுப்பிரமணிய சாமி!
'கோவிட் -19 கடவுள் செயல் என்று மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜிடிபி வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவானது 2015 ஆம் ஆண்டிலிருந்தே நிகழ்ந்துள்ளது. 2015 இல் ஜிடிபி 8 சதவிகிதமாக இருந்தது. 2020 இல் முதல் காலாண்டு பருவத்தில் இது 3.1 ஆக சரிந்துள்ளது. இது கரோனா பரவலுக்கு முந்தைய நிலவரமாகும். இதுவும் கடவுளின் செயலா?' என கேட்கிறார் சுப்பிரமணிய சாமி!
மத்திய அரசு, தான் இயற்றிய சட்டத்தினையே கடவுளைத் துணைக்கழைத்து மீறுவது எவ்வகையில் நியாயமானது?
இது கூட்டாட்சித் தத்துவம், அரசியல் அமைப்பு உருவாக்கியுள்ள சட்டத்தின் ஆட்சிக்கே விரோதமான முரணான போக்கு, தத்துவம் அல்லவா?
இந்தக் காலகட்டத்தில் பெரும் கொள்ளை லாபக் குபேரர்களான கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துகளும், வருவாய்களும் மட்டும் பெருகி கொழுத்துக் கொண்டுள்ளது!
அந்த பெருமுதலாளிகளுக்கு மத்திய அரசு பேரிடரையொட்டி புது வரிகளைப் போட்டு இந்த இழப்பீட்டைச் சரி கட்டலாமே! இந்த அரசின் உதவியால்தானே அதானிகளும், அம்பானிகளும் மற்ற பெரு கார்ப்பரேட் தொழிலதிபர் அமைப்புகளும் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டுள்ளன!
விபரீத யோசனை கைவிடப்பட வேண்டும்!
அவர்களை விட்டுவிட்டு மாநிலங்களின் தலையில் கை வைத்து அவர்களைத் திருவோடு ஏந்தும்படிக் கூறுவது, எப்படிப்பட்ட மோசமான நிலை!
எனவே, இந்த விபரீத யோசனை கைவிடப்பட வேண்டும்!"
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago