கொடைக்கானல் என்றதும் பலருக்கும் அதன் எழிலும் சுற்றுலாவும் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால், கொஞ்சும் எழிலையே மூலதனமாகக் கொண்டு, வருவோரை எல்லாம் மகிழவைத்த கோடையின் மக்கள் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து கருகி நிற்பதை பலரும் அறிவதில்லை.
ஆண்டுதோறும் சுற்றுலாவை குறிவைத்து மார்ச் மாதமே டன் கணக்கில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் இந்த ஆண்டு மார்ச் லாக்டவுனுடன் ஆரம்பித்ததால் குப்பையில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது. சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் எனப் பல குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடியில் உள்ளனர்.
கொடைக்கானலும் சுற்றுலாவும் பிரித்துப் பார்க்க முடியாததாக இருப்பதால் நம் அனைவருக்கும் அது மட்டுமே தெரிகிறது. ஆனால், விவசாயம், குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, சட்டவிரோதக் கட்டுமானங்கள் என அடுக்கடுக்கான பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.
35 ஆண்டுகளுக்குப் பிறகு:
இத்தகைய சூழலில், தற்போது நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானல் வருவாய் கோட்டத்திற்கு பதவி உயர்வு பெற்று வருபவர்கள் கோட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டுவந்தனர். 35 ஆண்டுகளுக்கு முன்பு குர்னிகால் சிங் பிர்சாதா என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கொடைக்கானல் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்தார். இதற்குப் பிறகு தற்போது நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போதைக்கு கொடைக்கானலுக்கு உடனடித் தேவை ரீஸ்டார்ட் என்று உள்ளூர்வாசிகள் புதிய உதவி ஆட்சியரிடம் கோரிக்கையை முன்வைக்க அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். ஆனால், சுற்றுலாவைத் தாண்டி கொடைக்கானலுக்குத் திட்டங்கள் தேவை என்று பட்டியலிட்டார்.
கொடைக்கானலில் உள்ள பிரதான பிரச்சினைகள் என்னவென்று உள்ளூர்வாசியும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு நிறுவனருமான அப்பாஸிடம் பேசினோம்.
கொடைக்கானலை மற்ற ஊர்களுடன் சமநிலையில் வைத்து அரசாங்கம் பார்க்கக் கூடாது. கொடைக்கானல் முற்றிலும் மாறுபட்ட பகுதி. முழுக்க முழுக்க சுற்றுலாவைச் சார்ந்திருப்பதால் ரீஸ்டார்ட் கொடைக்கானல் என்றொரு புதிய திட்டம் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும். முதலில் இங்குள்ள மக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6000 கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். தொழில்களை மீட்டெடுக்க நகராட்சி நிர்வாகமே வங்கிகளில் பேசி கடன் பெற்றுத்தர வேண்டும்.
கொடைக்கானலில் விவசாயக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மனோரஞ்சிதம் அணை, மன்னவனூர் அணை விவசாயிகளில் கனவாகவே நீண்ட நாட்களாக உள்ளது. இதுதவிர கொடைக்கானல் பாதரசம் தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதுதவிர சாலை வசதி, மலைக் கிராம மக்களின் வாழ்வாதாரம் என நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன எனப் பட்டியலிட்டார்.
இந்தக் கேள்விகளோடு உதவி ஆட்சியரை அணுகினோம். 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
கொடைக்கானல் வருவாய் கோட்டத்திற்கு 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடி ஐஏஎஸ் அதிகாரி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
புதிய பொறுப்பில் இணையும்போது புத்துணர்ச்சியாக இருந்தது. பணியில் இணைவதற்கு முன்னதாக பழைய ஆர்.டி.ஓ-விடம் பேசியிருந்தேன். அவர் கொடைக்கானலின் சவால்கள், தேவைகளை விளக்கினார். அதன் பின்னர் நாள்தோறும் வரும் மனுக்களும் இங்குள்ள சவால்களை விளக்குகின்றன. ஒரு மலைப்பிரதேசத்தின் நிர்வாகம் எவ்வளவு சவாலானது என்பது புரிந்துள்ளது. பணியில் சேரும்போது இருந்த புத்துணர்ச்சியுடனேயே கொடைக்கானலின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற ஆவல் உள்ளது. அதைச் செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது.
கொடைக்கானலில் ஒன்றாக வேலை செய்வோம். புதுமையான யோசனைகளை அனுப்புங்கள், விவாதித்துச் செயல்படுவோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளீர்கள். உங்களின் கனவுத் திட்டம் என்று ஏதாவது இருக்கிறதா?
இது நான் எப்போதும் கேட்பதே. பயிற்சிக் காலத்தில் இருந்தே, பிரச்சினைகளுக்கு விவாதித்து ஆலோசனைகள் செய்து தீர்வு காணலாம் என்பது எனது நம்பிக்கை. அதுவும் மலைப் பிரதேசத்தை நிர்வகிப்பது வித்தியாசமானது, சவாலானது என அனுபவமிக்கவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனால் பணியைத் தொடங்கும் முன்னரே உள்ளூர் மக்களின் ஆலோசனைகளைக் கேட்டறிய முடிவு செய்தேன். வேறு எங்கிருந்தாலும் நான் இதனைச் செய்திருப்பேன்.
கொடைக்கானலை மற்ற ஊர்களுடன் சமநிலையில் வைத்து அரசாங்கம் பார்க்கக் கூடாது, கொடைக்கானல் முற்றிலும் மாறுபட்ட பகுதி. முழுக்க முழுக்க சுற்றுலாவைச் சார்ந்திருப்பதால் ரீஸ்டார்ட் கொடைக்கானல் என்றொரு புதிய திட்டம் வேண்டுமென்பதே உள்ளூர்வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கொடைக்கானல் முழுக்க முழுக்க சுற்றுலாவைச் சார்ந்திருந்தாலும் கூட இப்போதைய சூழலில் மக்களின் உயிர் முக்கியமானதல்லவா. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளன. அன்லாக் தளர்வுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விரைவில் ரீஸ்டார்ட் ஆக சாத்தியக்கூறுகள் உள்ளன.
அதேவேளையில் கொடைக்கானலை சுற்றுலா மையமாக மட்டுமே அணுகாமல். அங்குள்ள விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். சர்வீஸ் செக்டார், ஐடி செக்டார் இங்கு அமைய வேண்டும் என்பது எனது நோக்கம். இவற்றை நிறைவேற்றுவது அரசாங்கத்தாலே இயலும் என்றாலும் இதனை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வேன். மேலும் , கொடைக்கானலில் நலனுக்கான பிற திட்டங்களைச் செயல்படுத்த திறந்த மனதுடனேயே உள்ளேன். ஓர் உதவி ஆட்சியராக இவற்றையெல்லாம் நிறைவேற்ற உள்ளூர் மக்கள், உயர் அதிகாரிகள், தன்னார்வலர்கள் என அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது.
கரோனா ஒரு புதுவகை வைரஸ். அதனால் அதன் தாக்கத்துக்கு ஏற்ப அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி காலத்தின் தேவைக்கேற்ப முடிவுகளை எடுக்கவேண்டும்.
பாதரசத் தொழிற்சாலையில் என்னதான் நடக்கிறது என்பது வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். இதில் மக்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?
பாதரசத் தொழிற்சாலை சிக்கல் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அங்கு நடப்பது வெளியில் சொல்லக் கூடாது என்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது என்றால் அதைத் தெரிவிக்க இயலாது. ஒருவேளை அதைப் பற்றி விவரிக்கலாம் என்றால் ஆட்சியரின் உரிய அனுமதியோடு தெரிந்து சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
கொடைக்கானல் பூண்டு வாசம் உலகம் முழுவதும் வீசினாலும் விவசாயிகள் வாழ்க்கையில் மனம் வீசவில்லை. தற்போது இந்த பூண்டுக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. ஆனால், கொடைக்கானல் மலையில் மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கக் கூடிய பூண்டு உட்பட பல்வேறு விவசாயப் பொருட்களுக்கும் ஒரு கொள்முதல் நிலையம் என்பது கனவாகவே இருக்கிறதே?
கொடைக்கானலில் விவசாயக் கொள்முதல் நிலையம் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் உள்ளேன். ஏனெனில் அடிப்படையில் நான் ஒரு விவசாயி. விவசாயப் பொருட்கள் நேரடிக் கொள்முதல் மூலம் லாபம் சேர்வதே அவர்களின் வாழ்வாதாரம். அதை உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனையும் உயரதிகாரிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.
கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணை சீரமைக்கப்பட்டு மண் அணை கட்டப்பட வேண்டும் என்ற உள்ளூர்வாசிகளின் கோரிக்கைக்கு என்ன பதில்?
கொடைக்கானலின் தண்ணீர் பிரச்சினை எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. மனோரஞ்சிதம் அணையில் மண் அணை அமைப்பது, மன்னவனூர் அணை கனவை நிறைவேற்றுவது என விவசாய சங்கங்கள், பொதுமக்கள் நிறைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றில் எங்கு சிக்கல் இருக்கிறது என்பதை ஆராய்ந்து நிச்சயமாகத் தீர்வு காண முடியும். இந்த அணைகளையும் தாண்டி நிறைய குளங்கள் தூர்வாராமல் இருக்கும் பிரச்சினைகளும் மனுக்களாக வந்துள்ளன. அவற்றைக் கண்டறிந்து எல்லைகளை நட்டு சீரமைக்கப்படுவதில் முனைப்பு காட்டப்படும்.
கொடைக்கானலின் கடைக்கோடி மலைக்கிராமவாசியும் பயனடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பேன்.
இவ்வாறு உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் தெரிவித்தார்.
தொடர்புக்கு:bharathipttv@gmail.com
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago