கரோனா; குணமடைபவர்கள் விகிதம் அதிகமாகவும் உயிரிழப்பவர்கள் விகிதம் குறைவாகவும் உள்ள மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் பழனிசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் குணமடைபவர்கள் விகிதம் அதிகமாகவும், உயிரிழப்பவர்கள் விகிதம் குறைவாகவும் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஆக.29) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"கோவிட் வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றது.

எனது தலைமையில் 14 முறை மாநில பேரிடர் மேலாண்மை குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை, எனது தலைமையில் 9 அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளன.

தலைமைச் செயலாளர், 11 முறை காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்துத் தேவையான தளர்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை கோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தியும், வீடு வீடாகச் சென்றும், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்தும், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றைச் சிறப்பாக மேற்கொண்டும் வருகிறோம்.

தற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளில் 58 ஆயிரத்து 840 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 77 ஆயிரத்து 223 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 26 ஆயிரத்து 801 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

ஐசியு வசதி கொண்ட 4,782 படுக்கைகளும், 5,718 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. கோவிட் தொற்று சிகிச்சைக்காக 2,882 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

நமது மாநிலத்தில்தான் மிக அதிகமாக 146 ஆய்வகங்கள், அதாவது 63 அரசு மற்றும் 83 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 45.73 லட்சம் நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19 ஆய்வகப் பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 75 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. தனியார் மையங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.

கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், என் 95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே இயந்திரங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவில் தமிழக அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றது.

களப்பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ சிகிச்சையும் நோயாளிகளுக்குச் சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுரக் குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் 85.45 சதவீதத்திற்கு மேல் உள்ள மாநிலமாகவும், மிகக் குறைவான, அதாவது 1.7% இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டுத் திட்டப் பணியாளர்களுக்கு வேண்டுமெனில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் இருந்து 4 லட்சத்து 24 ஆயிரத்து 394 இடம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பத்திரமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும், 80 ஆயிரத்து 779 வெளிநாட்டு வாழ் தமிழர்களை வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.

தமிழ்நாடு அரசு, தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கைகளை முறையாகக் கழுவுதல் ஆகியவற்றை உறுதிபடுத்தியுள்ளது.

பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும். கோவிட் ஆர்.டி.பிசி.ஆர் பரிசோதனையின்போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவித்தல் வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அம்மையங்கள் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க, உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டு இருந்த போதிலும், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்க தக்க முகக்கவசங்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 46 லட்சம் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக் கவசங்களை சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில், இதுவரை 72.56 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்களித்து, முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து, அவர்களைப் பாதுகாக்க தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு, மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தியது.

பின்னர், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

கரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69 ஆயிரத்து 712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இக்கரோனா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 1 லட்சத்து 53 ஆயிரத்து 576 சுய உதவிக் குழுக்களுக்கு, 5,934 கோடி ரூபாய் வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 67 ஆயிரத்து 354 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 720 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனது தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்கள் நடத்தி, உடனுக்கு உடன் தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்க அறிவுறுத்தியதனால், மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிக அளவில், அதாவது சுமார் 7,518 கோடி ரூபாய்க்கான ஒப்புதலினைப் பெற்று இந்தியாவில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களைப் பெருமளவில் சென்று சேர்ந்து, மக்களைப் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து பாதுகாத்தன எனவும், வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது. பருவ காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புற/ ஊரகப் பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்படி கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளைத் தூர்வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களைச் சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக, 1,433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,278 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. போதிய அளவில் வேளாண் இடுபொருட்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்கள். எனவே, வேளாண் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், பருவமழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், மற்றும் கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விரைவில் பருவமழையும் தொடங்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் பகுதிகளைத் தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிந்து செல்லத்தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால், டெங்கு கொசு உருவாக வாய்ப்பு ஏற்படும். டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான்.

வரலாற்றுச் சாதனையாக தமிழக அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது. அப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு செய்து, பணியினை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்