காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரரான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அன்று பிறந்தவர் வசந்தகுமார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதலீட்டைக் கொண்டு மளிகைக் கடையைத் தொடங்கி பின்னர் விஜிபி பாணியில் தவணைப்பொருட்கள் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்ட் கோ என்னும் வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய பல மாநிலங்களில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்துக்குக் கிளைகள் உள்ளன.
வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கூட்டணியில் நின்று எம்.பி.ஆனார்.
மிகுந்த தமிழ்ப்பற்றும், மக்கள் பணியில் ஆர்வமும், எளிய முறையில் அனைவருடனும் பண்புடன் பழகக்கூடியவர் வசந்தகுமார். கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். சமீபகாலமாக அவர் சென்னையில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கரோனா பரிசோதனை செய்தபோது வசந்தகுமாருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை ஆரம்பத்தில் சீராக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முதல் வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது.ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
வசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகன் இத்தகவலைத் தெரிவித்ததாகவும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ட்விட்டரில் இன்று பிற்பகலில் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 7 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.
வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான அகத்தீஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடக்கும் எனத் தெரிகிறது.
வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago