முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மத்திய சட்ட ஆணைய முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.லட்சுமணன் மாரடைப்பால் காலமானார். மனைவி இறந்த 2 நாளில், அவர் உடல் நலம் குன்றி மறைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
» அருந்ததியர் சமூகத்துக்கு 3% உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், 26.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் தலைசிறந்த வழக்கறிஞர். இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் திறம்படப் பணியாற்றியவர். பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் என்ற பெருமைக்குரியவர்.
குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை விதித்து தீர்ப்பளித்தவர். சென்னை பார் கவுன்சில் செயலாளராகவும், தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்தால் முல்லைப் பெரியாறு ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டவர்.
நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன், தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர். இவர் பல நூல்களையும் எழுதிய பெருமைக்குரியவர். அன்னாரின் மறைவு தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.லட்சுமணன் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
உச்ச நீதிமன்றத்திலும், சென்னை, கேரளம், ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களிலும் பணியாற்றிய நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் கூடுதலான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை புரட்சிகரமான தீர்ப்புகளாகும்.
இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தவர். நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். என் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர்.
புகையிலைப் பொருட்களுக்கு எதிராக எனது தலைமையில் பாமக நடத்திய போராட்டங்கள்தான் பொது இடங்களில் புகை பிடிப்பதையும், குட்கா விற்பனையையும் தடை செய்து தாம் தீர்ப்பளித்ததற்கு காரணமாக இருந்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்கும் நான்தான் முன்னோடி என்றும் பல்வேறு தருணங்களில் நீதியரசர் லட்சுமணன் பதிவு செய்திருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றியவர். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்து சிறப்பான பரிந்துரைகளைச் செய்தவர்.
நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட முல்லை பெரியாறு ஆய்வுக் குழுவில் உறுப்பினராக இருந்து பயனுள்ள வகையில் பரிந்துரைகளைச் செய்தவர். தேவகோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கி, படிப்படியாக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்புகளை வகித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago