தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில்தான் கரோனா வைரஸ் தலைகாட்டத் தொடங்கியது. அப்போதுதான் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான கூட்டமும் நடைபெற்று வந்தது. கரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி சட்டப்பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தவண்ணம் இருந்தன. இறுதியில் அவசர அவசரமாக பட்ஜெட் கூட்டத்தை மார்ச் 24-ம் தேதியுடன் நடத்தி முடித்து, சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தியாக வேண்டும். அதன்படி செப்டம்பர் 24-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றாக வேண்டும்.
ஆனால், சென்னையில் கரோனா பரவலின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதுவரை 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓர் உறுப்பினர் உயிரிழந்தும்விட்டார். எனவே, சட்டப்பேரவைக் கூட்டத்தைத் தனிமனித இடைவெளியுடன் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவைக் கட்டிடம் மிகச் சிறியது. அங்கே ஏற்கெனவே இட நெருக்கடி உள்ளது. தற்போதைய சூழலில் அந்தச் சட்டப்பேரவைக் கட்டிடத்தில் தனிமனித இடைவெளியுடன் எம்.எல்.ஏ.க்களை அமரவைத்து, சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, வேறு ஏதாவது ஓரிடத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
» பிடிவாதம் வேண்டாம்: நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
» மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதம்: வடமாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவார்களா?
அதன் ஒரு பகுதியாகச் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபம் அல்லது கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த இரு வாரங்களுக்கு முன்பே தகவல்கள் வரத்தொடங்கின. இந்நிலையில் ஆகஸ்ட் 22 அன்று தமிழக சபாநாயகர் ப. தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாம் தளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகமும் நேற்று முன்தினம் கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். எனவே, கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள இன்றைய சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கு வெளியே நடப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் சட்டப்பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 1921 முதல் 1937-ம் ஆண்டு வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கவுன்சில் சேம்பர்ஸில்தான் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. 1938-1939-ம் ஆண்டில்தான் முதன் முதலாக தமிழகச் சட்டப்பேரவை வேறு இடத்தில் நடத்தப்பட்டது. அப்போது சென்னைப் பல்கலைக்கழக செனட் ஹவுஸ் மற்றும் ராஜாஜி ஹாலில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், 1940-ம் ஆண்டில் சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இடம் மாறியது.
சுதந்திரத்துக்குப் பிறகு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்துக்கெனப் பெரிய சட்டப்பேரவைக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்கென 10 லட்சம் ரூபாய் செலவில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்டப் பகுதியில் புதிய சட்டப்பேரவை மண்டபம் கட்டப்பட்டது. இதை அன்றைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா 1952-ம் ஆண்டில் திறந்துவைத்தார். 1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை இங்கேதான் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வந்தது. 1956-ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு ஆந்திரா பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்தில் குறைந்தன. இதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
இதனால், மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அசெம்பிளி ஹால் (சட்டப்பேரவை மன்றம்) என்ற பெயரில் சட்டப்பேரவை இடம் மாறியது. வாலாஜா சாலையில் இருந்த சட்டப்பேரவை மண்டபம் மாற்றியமைக்கப்பட்டுச் சிறார் திரைப்படத்துக்கான திரையரங்காக மாற்றப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியில் 1974-ல் அந்தக் கட்டிடம் அரங்கமாக மாற்றப்பட்டது. அந்த அரங்கத்துக்குக் கலைவாணர் அரங்கம் என்ற பெயரும் சூட்டப்பட்டது.
1956-ம் ஆண்டில் இன்றைய சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கு சட்டப்பேரவை மாறிய பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளி இடங்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊட்டியில் உள்ள அரண்மூர் மாளிகையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது. கோடைக் காலத்தைக் கருத்தில்கொண்டு அப்போது குளிர்ப் பகுதியான ஊட்டியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இது அரசியல்ரீதியாக அன்று விமர்சனப் பொருளானது.
அதன் பிறகு தொடர்ந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவைக் கட்டிடத்தில்தான் சட்டப்பேரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட பிறகு 2010 -2011 பட்ஜெட் கூட்டத்தொடர் வரை சட்டப்பேரவைக் கூட்டங்கள் அங்கே நடைபெற்றன. 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பழையபடி புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை இடம் மாறியது.
இன்று கரோனா வைரஸ் தந்த நெருக்கடி காரணமாக சட்டப்பேரவைக் கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதன்முதலாக சென்னையில் சட்டப்பேரவை மண்டபம் (பழைய கலைவாணர் அரங்கம்) கட்டப்பட்ட அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய கலைவாணர் அரங்கத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரலாறு திரும்புகிறது!
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago