மத்தியப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு தணிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 313 பேராசிரியர் பணியிடங்களில் 9 பணியிடங்கள் மட்டுமே அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி ஒரே ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்படவில்லை.
» விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்; ஜி.கே.வாசன்
» கடைக்கோடி கிராமத்தை அடையுமா உதவி ஆட்சியரின் பணி? - கொடைக்கானல் மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக, 0.77% மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், இணைப் பேராசிரியர் பணியைப் பொறுத்தவரை 735 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 38 ஓபிசிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, இணைப் பேராசிரியர் பணிகளில் ஓபிசிக்கு 1.39% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும்தான் ஓபிசிகளுக்கு சுமார் 16% இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கடந்த 1990-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சட்டப் போராட்டங்களுக்குப் பின் 27% இட ஒதுக்கீடு 1993-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால், பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிகளில் இட ஒதுக்கீடு சராசரியாக ஒரு விழுக்காடு என்ற அளவில்தான் உள்ளன என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இட ஒதுக்கீடு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது என்றுதான் பொருள்.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த நிலை என்றால், ஐஐடி, என்ஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் ஓபிசிகளுக்கான இட ஒதுக்கீடு இன்னும் மோசமாக இருக்கிறது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
ஆனால், அந்த உண்மையை மறைப்பதற்காக உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் பொய்களை வாரி இறைக்கின்றனர். அவர்கள் முன்வைக்கும் முதல் பொய் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்றவர்கள் யாரும் இல்லை என்பது தான். இது ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும் கொச்சைப்படுத்தும் செயலாகும்.
எந்தப் போட்டித் தேர்வாக இருந்தாலும் சரி... பேராசிரியர்கள் உள்ளிட்ட எந்தப் பணியாக இருந்தாலும் சரி... உயர் பதவிகளை அனுபவிப்பதற்காகவே பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களைக் காட்டிலும் பிற பிற்படுத்தப்பட்டோரின் செயல்பாடுகளும், திறமையும் மிகவும் சிறப்பாகவே உள்ளன.
எனவே, பேராசிரியர் பதவி வகிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தகுதி இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத பொய். இது ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியை மூடி மறைப்பதற்கான பூச்சு ஆகும்.
உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர் பணிக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பெரும்பான்மையான பேராசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படாமல், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களில் இருந்து பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதிலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதில்லை.
பல நேரங்களில் பதவி உயர்வு மூலமான பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு கூட, வெளிப்படையாக வெளியிடப்படாமல், வேண்டியவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படுகிறது. அதனால்தான் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிக்கு ஓபிசிகளால் வர முடியவில்லை.
உதவிப் பேராசிரியர்கள் முழுக்க முழுக்க நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படுவதால்தான், அனைத்து சதிகளையும் முறியடித்து, அப்பதவிகளில் சுமார் 16 விழுக்காடு இடங்களை ஓபிசி வகுப்பினர் பிடித்துள்ளனர். பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிகளும் முழுக்க, முழுக்க நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டால், அவற்றை ஓபிசிகள் அதிக அளவில் கைப்பற்றுவர் என்பது உறுதி.
மீண்டும், மீண்டும் நான் கூறுவது என்னவெனில் உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசி வகுப்பினருக்கு எதிரான சக்திகளின் ஆதிக்கம் இன்னும் முறியடிக்கப்படவில்லை. அந்தச் சக்திகளுக்கு எல்லையில்லாத அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், அதைப் பயன்படுத்தி பேராசிரியர் பணிகளுக்கு ஓபிசிகள் எவரும் வராத வகையில் தடுக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டால்தான் சமூக நீதியை நிலைநிறுத்த முடியும்.
அதற்காக, மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஓபிசிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு யார் கைப்பற்றியுள்ளனர்? அது எவ்வாறு சாத்தியமானது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்த நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து பறிக்க வேண்டும். அந்தப் பணியை மேற்கொள்ள வெளிப்படைத் தன்மை கொண்ட தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago