பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

அதிகரிக்கும் கரோனா: மத்திய குழுவைப் பலப்படுத்தி அரசுக்கு உதவ 3 விஞ்ஞானிகள் நாளை புதுச்சேரி வருகை

செ.ஞானபிரகாஷ்

அதிகரிக்கும் கரோனாவால், மத்திய குழுவைப் பலப்படுத்தி அரசுக்கு உதவும் வகையில் 3 விஞ்ஞானிகள் குழு நாளை புதுச்சேரி வருகிறது.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவல் தேசிய சராசரியை விட அதிகரித்துள்ளது. எனவே, கரோனா மேலாண்மைப் பணிகளை மேற்பார்வை செய்ய நிபுணத்துவம் பெற்ற குழுவை அவசரமாக நியமிக்குமாறு பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் புதுவையில் கரோனா பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பொது சுகாதார இயக்குநரகம், 3 நிபுணர் கொண்ட மருத்துவக் குழுவை நியமித்துள்ளது. அக்குழுவில், ஜிப்மர் சமுதாய மருத்துவத் துறை தலைவர் சோனாலி சர்க்கார், மைக்ரோ பயாலஜி துறை பேராசிரியர் சுஜாதா, சுவாச மருத்துவத்துறை பேராசிரியர் சகா வினோத்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இச்சூழலில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) இயக்குநரும் அரசு செயலாளருமான பல்ராம் பார்கவாவிடம் தொலைபேசியில் பேசினார்.

இதைத் தொடர்ந்து, கிரண்பேடிக்கு பல்ராம் பார்கவா இன்று (ஆக.25) அனுப்பியுள்ள கடிதத்தில், "ஐசிஎம்ஆரின் சென்னை தேசிய நோய்த்தொற்று அறிவியல் மையத்தின் (NIE) இயக்குநர் மனோஜ் முர்ஹேகர், விஞ்ஞானிகள் கணேஷ் குமார், நேசன் ஆகியோர் மத்திய குழுவைப் பலப்படுத்தவும், புதுச்சேரி அரசு நிர்வாகத்துக்கு உதவவும் புதுச்சேரிக்கு வரவுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிக் குழு புதன்கிழமை (நாளை) புதுச்சேரி வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடித விவரத்தைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பகிர்ந்து தனது நன்றியையும் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT