பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, திமுகவை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இதற்கு முன்பு, தமிழக பாஜகவின் நிர்வாகக் கூட்டத்தில் பேசிய முரளிதர் ராவும் திமுகவை விமர்சித்துப் பேசியதுடன், ஜனநாயக மாண்புகளுக்குப் புறம்பாக, “மு.க.ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம்” எனத் தனிப்பட்ட முறையில் என்னைக் குறி வைத்துப் பேசியதையும் இங்கே நினைவூட்டிட விரும்புகிறேன்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வரும் பாஜக தமிழ்நாட்டில் தங்களுக்குத் தலையாட்டுகின்ற பொம்மை ஆட்சியாளர்களாக அதிமுக அரசு இருப்பதால், அதன் முதுகில் ஏறி சவாரி செய்துகொண்டு, திமுகவை நோக்கி தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறது.
இன்று (ஆகஸ்ட் 24) காணொலி வாயிலாக நடந்த பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது” என்றும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.
திமுக என்பது ஜனநாயக இயக்கம்; வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, பாடுபட்டுவரும் இயக்கம். ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்து - மக்களின் அடிப்படை சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே எமர்ஜென்சியை எதிர்த்து நின்று ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம்.
‘மிசா’ சிறைக் கொட்டடியில் தியாகத் தழும்புகளை ஏந்திய தீரர்களாம் தொண்டர்களைக் கொண்ட மக்கள் இயக்கம். இன்றைக்கு மத்திய பாஜக அரசில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது. அவரவர் தாய்மொழி மீது ஆதிக்க மொழியைத் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகநீதிக் கொள்கையைத் தகர்த்திடத் திட்டமிடப்படுகிறது. ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
சமூக செயற்பாட்டாளர்கள், கருத்துரிமை போற்றும் சிந்தனையாளர்கள் - எழுத்தாளர்கள் மீது கொடூரச் சட்டங்களின்கீழ் வழக்குகள் போடப்பட்டுச் சிறைப்படுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து கேள்விகளை எழுப்புவது ஜனநாயகத்தின் ஓர் அடிப்படைக் கடமை. நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி என இந்திய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட திமுகவிற்கு அந்த உரிமை நிரம்பவே இருக்கிறது.
உண்மைகளை உரக்கச் சொல்லி, உரிமைகளை வலியுறுத்தினால் அவர்களை ‘ஆன்ட்டி இண்டியன்’ என்றும் ‘தேசவிரோதிகள்’ என்றும் முத்திரை குத்தும் மலிவான போக்கை பாஜகவின் சில தலைவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அதன் தேசியத் தலைவர் நட்டாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை, தன் வாயால் நிரூபித்திருக்கிறார்.
நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தத் திருநாட்டை, மாநில அரசுகளின் ஒன்றியம் என்றே குறிப்பிடுகிறது. அத்தகைய மாநிலங்களின் உரிமைகளை மத்திய ஆட்சியாளர்கள் பறிக்கும்போது, எஜமானர்கள் வீட்டு வேலைக்காரர்களாக இருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் வாய்மூடி மவுனித்திருந்தாலும், மக்களின் மனதில் ஆட்சி செய்யும் ஜனநாயக இயக்கமான திமுக குரல் கொடுக்கவே செய்யும்.
விமான நிலையத்தில் இந்தியில் பேச வலியுறுத்துவது - அரசின் யோகா பயிற்சி குறித்த கூட்டத்தில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என விரட்டுவது - இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கி நிலைநிறுத்தியிருக்கும் நிலையில் இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது எனத் தமிழ்நாட்டின் நீண்ட நெடிய பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாக பாஜக இருக்கிறது.
அதுகுறித்து கேள்வி எழுப்பினால், திமுகவை வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், நாட்டு நலனுக்கு எதிராகத் தூண்டிவிடுகிற கட்சி என்றும் குற்றம்சாட்டுவதென்பது பாஜக தலைமையின் இயலாமையையே காட்டுகிறது.
பாஜக தலைவர்களிலேயே மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டவரான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தின் அடிப்படையில் திமுக பங்கேற்றிருந்தபோதுதான், தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உலக வர்த்தகம் தொடர்பான தோகா மாநாட்டில் பங்கேற்று, வல்லரசு வல்லூறுகளின் பிடியில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் சிக்காத வகையில் ஒப்பந்தங்களை உருவாக்கினார் என்கிற வரலாற்று ஏட்டின் பக்கங்களை நட்டா போன்றவர்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, ஜனநாயகத்திற்கு விரோதமாக - அரசியல் அமைப்புச் சட்டம் சுட்டிக்காட்டும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக - மதவாதத்தையும் - மொழி ஆதிக்கத்தையும் முன்வைத்து நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கின்ற - நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கின்ற கட்சியாக பாரதீய ஜனதா கட்சிதான் இருக்கிறது.
ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும் நடத்த முயற்சிக்கும் பாஜக தான், தமிழகத்தின் பண்பாட்டிற்கும் - இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் - ஜனநாயக மாண்புகளுக்கும் - நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago