முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு: காவல்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தேசியக் கொடியை அவமதித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கமளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்றும் பேசி வீடியோ வெளியிட்டார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஆக.24) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலேயே தேசியக் கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம்பெற்றுள்ளதாக காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான் தெரிவித்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த காவல்துறை தரப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் காந்தியடிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகவும், அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் தற்போது கருத்துத் தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்தது.

மேலும், தேசியக் கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறை, இன்று காலை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளதாகவும், இன்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவடையாததால் அவர் மீண்டும் வரும் 28 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் கொடி ஏற்றியபோது, தேசியக் கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருந்ததாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பழிவாங்கும் நோக்கில் தன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அடுத்த விசாரணை வரை தன்னைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என எஸ்.வி.சேகர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விசாரணையின்போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்தே அவரைக் கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும், இடையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுவுக்குப் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்